புதா, நேபாளிலிருந்து புலம்பெயர்ந்தவர். கடந்த ஒன்றரை வருடங்களாக பிகார்ஷாரிஃப் நகரத்தின் மதராசா அசிசியாவில் அவர் பணிபுரிந்து வந்தார். “நிறுத்த சொல்லி அவர்களை வேண்டியபோது, என்னை தாக்கத் தொடங்கினார்கள். என்னை குத்திவிட்டு, ‘ஏ நேபாளியே.. இங்கிருந்து ஓடிப் போ.. இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவோம்’ என்றனர்.”
மார்ச் 31, 2023 அன்று, ராமநவமி ஊர்வலத்தின்போது மதவாத கலவரக்காரர்களால் மதராசா (இஸ்லாமிய கல்விக்கான பள்ளி மற்றும் நூலகம்) எரிக்கப்பட்டபோதான சம்பவங்களை அவர் குறிப்பிடுகிறார்.
“நூலகத்தில் ஒன்றும் மிஞ்சவில்லை,” என்கிறார் புதா. “இப்போது அவர்களுக்கு காவலாளி தேவையில்லை. தற்போது எனக்கு வேலை கிடையாது.”
அவரிருந்த மதராசா மட்டுமின்றி, பிகாரின் நாலந்தா மாவட்டத்தின் பிகார்ஷாரிஃப் டவுனிலிருந்த பிற வழிபாட்டுத் தளங்களையும் மதவாத கலவரக்காரர்கள் தாக்கிய ஒரு வாரத்துக்கு பிறகு ஏப்ரல் 2023-ல் பாரி, மதராசா அசிசியாவுக்கு சென்றது. தொடக்கத்தில் அதிகாரிகள் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவு போட்டிருந்தனர். இணையமும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து இரு தடைகளும் நீக்கப்பட்டன.
நாம் சென்றிருந்தபோது அங்கு சோர்வுடன் நடந்து கொண்டிருந்த முன்னாள் மாணவர் சையது ஜமால் ஹாசன், “நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் என்னால் படிக்க முடியவில்லை,” என்கிறார். 1970ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் இப்பள்ளியில் தொடங்கினார். பட்டப்படிப்பு வரை படித்தார்.
”ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என பார்க்க வந்தேன்,” என்கிறார் ஹாசன்.