“எங்கள் கிராமம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாஷம் மாவட்டத்தில் உள்ளது. என் கணவரின் இறந்த உடலோடு எப்படி எங்கள் கிராமம் பாமருவிற்குச் சென்றேன் என்பதோ எப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பதோ எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. என் மாமனார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மின்னதிர்வுச் சிகிச்சையும், வேறு சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகுதான் என்னால் சுயநினைவிற்கு வர முடிந்தது. என் கணவர் நிஜமாகவே இறந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வதற்கே எனக்கு இரண்டு வருடங்கள் எடுத்தன.”
பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் தன் கணவரின் இறப்பு பற்றி நினைக்கும் பொழுது உடைந்து அழுகிறார். “என் உறவினர்கள் என்னை என் இரண்டு மகள்களுக்காக வாழ வேண்டும் என்றார்கள். அப்போதுதான் நான் என் போராட்டத்ததைத் துவங்கினேன். அருகில் உள்ள தொழிற்சாலையில் தூய்மைப்படுத்தும் வேலை கிடைத்தது. அந்த வேலையை வெறுத்தேன். என் பெற்றோரும் துப்புரவு பணியாளர்கள்தான். அப்பா, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதும் குப்பை அள்ளுவதும் அவரது வேலைகள். அம்மா, குப்பை பெருக்குபவர்.”
தமிழத்தில் பெரும்பான்மையான துப்புரவு தொழிலாளர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் தெலுங்கு பொழி பேசுபவர்கள். தமிழத்தின் நிறைய பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் படிப்பதற்காக சிறப்பு தெலுங்கு வழி பள்ளிகள் உள்ளன. நாகம்மாவும் அவரது கணவரும் பாமுரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். “1995ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அப்போது எனக்கு வயது பதினெட்டு. நான் பிறப்பதற்கு முன்பாகவே என் பெற்றோர் சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். என் கணவர் கட்டிட வேலை செய்யத் துவங்கினார். எப்பொழுது எல்லாம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய அழைக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் செல்வார். அவர் சாக்கடைகளில் வேலை செய்வது தெரிந்ததும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன். அதற்குப்பின் அந்த வேலைக்குச் செல்லும்போது என்னிடம் சொல்வதையே நிறுத்திவிட்டார். கழிவுநீர் தொட்டியில் அவருடன் சேர்ந்து இரண்டு பேர் இறந்துபோன போது யாரும் கைது செய்யப்படவில்லை. அந்தக் கொலைக்கு யார் மீதும் பொறுப்பு சுமத்தப்படவில்லை. பாருங்கள், இந்த நாடு எங்களை எப்படி நடத்துகிறதென்று. எங்கள் வாழ்வு ஒரு பொருட்டே கிடையாது. அரசாங்கம் , அரசு அதிகாரிகள் என எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை.2013ஆம் ஆண்டுதான் எனக்கு ஆந்தோலன் அமைப்போடு தொடர்பு கிடைத்தது. இறுதியாக, என் உரிமைகளை பெறுவதற்காக எப்படிப் போராட வேண்டும் என்று சஃபாய் கர்மச்சாரி ஆந்தோலன் அமைப்பு கற்றுக்கொடுத்தது.”
தன் உரிமைகளை அறிந்து கொண்ட நாகம்மா உறுதியாக குரல் எழுப்ப ஆரம்பித்தார். தன்னைப் போலவே தன் கணவரை, அன்புக்குரியவர்களை கழிவுநீர்த் தொட்டிக்குள் இழந்த மற்ற பெண்களை சந்தித்தார்., “நான் மட்டும் இல்லை, என்னைப் போல் கணவனை இழந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பது தெரிந்ததும், என் சோகங்கள் அனைத்தையும் பலமாக மாற்றிக்கொண்டேன்.” என்கிறார்.