உஷா தேவி, இறுதியாக தர்மேந்திர ராம்மைப் பார்த்த போது, இயல்பாகவே ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட அவரது உடலின் இன்னும் சுருங்கிய வடிவமாக அவர் இருந்துள்ளார். இதுகுறித்து கூறிய உமா, “அவர் துடித்தார், அழுகையை உதிர்த்தார். பின்னர் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது. கடைசியாக ஒரு கோப்பைத் தேநீர் கூட என்னால் அவருக்கு கொடுக்க முடியவில்லை” என்றார்.
இவ்வாறாக 28 வயதுடைய உஷாவின் கணவரது வாழ்வு முடிந்தது. ரேஷன் அட்டை இல்லாது , பசியாலும் நோயாலும் அவர் இறந்துள்ளார். நியாயவிலைக் (ரேஷன்) கடையில் அவரது அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு போதுமான ஆதார் அட்டை தர்மேந்திர ராமிடம் இருந்துள்ளது. எனினும், ரேஷன் கடைகளில் காண்பிக்கும் உண்மையான ரேஷன் அட்டை இல்லாததால் அது பயனற்றதாகவே இருந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த தர்மேந்திராவின் மரணத்தை தொடர்ந்து, அலகாபாத்தின் மௌய்மா பகுதியில் உள்ள அவரது கிராமமான தாரயுதா பலரது கவனத்தைத் ஈர்த்துள்ளது. பலர் வருகை புரிந்தனர். மேலும், இந்தப் பகுதியைச் சார்ந்த ஊடகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் வருகையையும் கோரியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிராம மேம்பாட்டு அதிகாரியும், அந்த கிராமத்தின் லேக்பாலும் (கிராம கணக்கர்) பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டன. அவற்றில், தேசிய குடும்ப நலத் திட்டத்தின் கீழ் ரூ. 30,000 மற்றும் ஐந்து பிஸ்வா அல்லது 570 சதுர மீட்டர் விவசாய நிலம் ஆகியவையும் அடங்கும். மேலும், 500க்கும் குறைவாக குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமத்திற்கு, இப்பகுதியைச் சார்ந்த அரசியல்வாதிகள் விரைந்தனர். அதுமட்டுமின்றி, தர்மேந்திராவின் மனைவி மாநில அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய்.500 பெற தகுதியுடையவராகவும் அறிவிக்கப்பட்டார்.
உஷா, செவித்திறன் குறைபாடுடையவர் மற்றும் போதிய விழித்திறன் அற்றவர். மேலும், அவரது இடது கை, வலது கையை விட குறிப்பிடத்தகுந்த அளவு சிறியது. இந்நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்தான மெல்லிய நினைவுகள் அவரிடம் இருந்தன. ஒரு அலுவலரின் (‘படா சாஹேப்”) காலில் அவர் விழுந்ததாகவும், “குச் தோ மடத் கரோ[குறைந்தபட்சம் ஏதாவது உதவி செய்யுங்கள்],” என்று அவரிடம் கூறியதாக நினைவுகூர்ந்தார்.








