"எங்களை ஏன் எல்லோரும் இத்தனை வெறுப்புணர்வுடன் பார்க்கிறார்கள்?" இது ஷீத்தலின் கேள்வி. ”ஒரு திருநங்கையாக இருப்பதால் எங்களுக்கு எந்த மாண்பும் இல்லையா?”
ஷீத்தல் இந்த வேதனையை காலம் கொடுத்த கசப்பான அனுபவத்தால் பேசுகிறார். அவருக்கு 22 வயது தான். இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நிறையவே புறக்கணிப்பையும் ஒடுக்குமுறையையும் சந்தித்துவிட்டார். பள்ளி தொடங்கி பணியிடம், சாலைகள் என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கசப்பனுபவம் தான்.
ஷீத்தல் அப்போது ஈச்சல்கரன்ஜியில் உள்ள நேரு நகரில் வசித்தார். அதுதான் அவரது வீடு, அங்குதான் இது தொடங்கியது. அப்போது அவருக்கு வயது 14 இருக்கும். எல்லோரும் அவரை அரவிந்த் என்றே அழைத்து வந்தனர். "நான் 8 அல்லது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என் வகுப்புத் தோழிகள் போல் பெண்கள் அணியும் உடை அணிய விருப்பம் ஏற்பட்டது. எனக்குள் நடப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்னையே அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பேன். என் தந்தை எனைக் கண்டு கோபத்தில் திட்டுவார். ’எதற்காக, ஒரு (பெண்ணைப் போல) உன்னை நீயே கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருக்காய். வெளியே சென்று மற்ற ஆண் பிள்ளைகளுடன் விளையாடு’ என்பார். எனக்கு சேலை அணிந்து ஒரு பெண்ணைப் போலவே வாழ விரும்புகிறேன் என்று என் தந்தையிடம் சொன்னபோது அவர் என்னை அடித்தார். என்னை மனநல காப்பகத்தில் சேர்த்துவிடுவதாக எச்சரித்தார். என்னை அவர் அடித்தபோது நான் கதறி அழுதேன்..."
ஷீத்தலின் (அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்தினர் அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று தங்கள் மகனின் மீதான சாபத்தை விலக்க பூஜைகள் நடத்தக் கோரியுள்ளனர். "என் அம்மாவோ யாரோ எனக்கு பில்லி, சூனியம் செய்துவிட்டதாகக் கூறினார். என் தந்தை நான் சரியாக வேண்டி ஒரு கோழியைப் பலி கொடுத்தார். (அவர் பழைய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்) ஆனால், என் பெற்றோருக்கு நான் பிறப்பால் ஓர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக வாழ விரும்புவது புரியவில்லை. அதை நான் சொல்லியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை".
16 வயதில், ஷீத்தல் வீட்டைவிட்டு வெளியேறினார். தெருவில் கையேந்தியும் கிடைக்கும் வேலைகளைப் பார்த்தும் பிழைத்துவந்தார். அன்றாடம் காலை 10 மணிக்குக் கிளம்பினால் மாலை மயங்கும் வரை பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்துவார். அருகிலுள்ள ஜெய்சிங்பூர், கோலாபூர், சாங்கிலி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பிச்சை எடுப்பார். தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை சம்பாதிப்பார். சில நேரங்களில் பொதுமக்கள் திருமணம், பெயர் வைக்கும் வைபவம், மதச் சடங்குகள் அல்லது வேறு சில நிகழ்ச்சிகளுக்காக கூட்டமாக 4, 5 திருநங்கைகளை அழைப்பர். அப்படியான நிகழ்வுகளில் அவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை பணம் கிடைக்கும்.








