சித்ரகுப்தா சில வாரங்களுக்கு முன்னர் வாக்குகளைச் சேகரித்ததை போல, பல்வேறு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் இறந்த ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஆகியோரின் பெயர்களை மாவட்டம் வாரியாக சென்று 50வது முறையாக கணக்கிட்டு வந்தார். இந்த வேலையை திறன்பட செய்ய அவர் இயந்திரத்தை நம்பவில்லை. தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கும் அவருக்கும் மேலுள்ளவர்களுக்கும் ஆவணங்களை அனுப்புவதற்கு முன்னர் அவற்றின் உண்மை தன்மையை அவர் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
இறந்தவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய விருதுகளுக்காக காத்திருந்தனர். சிறு தவறை கூட அவர் அனுமதிக்க முடியாது. இறந்தவர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு முன்பு, பூமியில் அவர்கள் செய்திருந்த முன் வினைகள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தவறின் செலவும் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அவர் எண்ணிக்கொண்டே இருந்தார். மீண்டும் மீண்டும் எண்ணினார். ஒவ்வொரு முறையும் அவர் சில வினாடிகள் எண்ணும்போது, முடிவில்லாத அந்த இறந்த ஆத்மாக்களின் பட்டியலில் இன்னும் சில பெயர்கள் சேர்க்கப்பட்டது. இறந்தவர்களை பாதாளலோகத்தில் தனது அலுவலகத்தின் வெளியில் வரிசையில் நிறுத்தினால், அந்த வரிசை பிரயாகராஜுக்கு நீளும் என அவர் கற்பனை செய்தார்.



