தெற்கு மும்பையின் புலேஷ்வரிலுள்ள குழப்பமான குறுக்குச் சந்துகளின் ஆழத்தில் மன்சூர் ஆலம் ஷேக் அனுதினமும் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல எழுந்து விடுகிறார். மெலிவாக, எப்போதும் லுங்கியில் காணப்படும் அவர், 550 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாடகை உலோக வண்டியை கோவாஸ்ஜி படேல் டேங்கில் நீர் நிரப்பத் தள்ளிச் செல்கிறார். அவரின் வசிப்பிடத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அப்பகுதி. அவர் மிர்சா காலிப் மார்க்கெட்டுக்கு அருகே துத் பஜாரில் இருக்கும் பொதுக் கழிப்பறையின் மூலையில் திறந்த வெளியில் வசிக்கிறார். வண்டியுடன் துத் பஜாருக்கு மீண்டும் வருகிறார். ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வண்டியை நிறுத்துகிறார். கடைகளிலும் அருகாமை வீடுகளிலும் இருக்கும் அவரின் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுக்கத் தொடங்குகிறார்.
50 வயது மன்சூர் இறுதியாக மிஞ்சியிருக்கும் பிஷ்டிகளில் ஒருவர். அந்த வேலையைப் பார்த்துதான் அவருக்கான வாழ்வாதாரத்தைப் பெறுகிறார். மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுத்தப்படுத்தவும் கழுவதும் துவைக்கவும் குடிக்கவும் முப்பது ஆண்டுகளாக அவர் நீர் விநியோகித்துக் கொண்டிருக்கிறார். கோவிட் தொற்று பிஷ்டிகளின் தொழிலை பாதிக்கும்வரை, 30 லிட்டர் நீரைச் சுமக்கக் கூடிய மஷாக் என்னும் தோல்பையில் புலேஷ்வரில் நீர் விநியோகித்த சில மஷாக்வாலாக்களில் மன்சூரும் ஒருவர்.
ஆனால் மஷாக்கில் நீர் விநியோகிக்கும் பாரம்பரியம் ”இப்போது செத்துப் போய்விட்டது” என்கிறார் 2021ம் ஆண்டில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளுக்கு மாறிவிட்ட மன்சூர். “பழைய பிஷ்டிகள் மீண்டும் அவர்களது கிராமத்துக்கு திரும்ப வேண்டும். இளைய பிஷ்டிகள் புதிய வேலைகள் தேட வேண்டும்,” என்கிறார் அவர். வட இந்தியாவின் இஸ்லாமியச் சமூகமான பிஷ்டியின் பாரம்பரியத் தொழிலின் மிச்சம்தான் ‘பிஷ்டிகள்’ வேலை. பாரசீக மூலத்தைக் கொண்ட ‘பிஷ்டி’ என்கிற வார்த்தைக்கு ‘நீர் சுமப்பவர்’ என அர்த்தம். அச்சமூகத்துக்கு சக்கா என்கிற பெயரும் உண்டு. அரபி வார்த்தையான சக்காவுக்கு ‘நீர் சுமப்பவர்’ அல்லது ‘கோப்பை கொண்டவர்’ என அர்த்தம். ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷம், ஹரியானா, தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் (இங்கு இச்சமூகத்துக்கு பெயர் பகாலி) ஆகிய இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிஷ்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

























