நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விஜயா பார்தாடே பாட்டி ஆனார். அவருக்கு அப்போது 34 வயது தான். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஆர்வி கிராமத்தில் இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட குடிசைக்கு வெளியே இருக்கும் கல் மேடையில் அமர்ந்தபடி, "எனக்கு திருமணம் நடந்தபோது 14 வயது தான்", என்று கூறுகிறார். அவரது கணவர் பந்துவுக்கு அப்போது 18 வயதிற்கு மேல் இருக்காது. "நான் எனது பெற்றோரை ஓரிரு வருடங்கள் காத்திருக்கும்படி கூறினேன்", என்று அவர் கூறினார். "ஆனால் அவர்கள் இதுதான் சரியான வயது என்று கூறினர். என்னுடைய தோழிகள் அனைவருக்கும் இதே வயதில்தான் திருமணமானது. அதனால் இதுதான் சரியான வயதாக இருக்கும் என்று நானும் கருதினேன்", என்றார்.
திருமணமான ஒரு வருடத்திற்குள் விஜயா அம்மாவானார். ஐந்து வருடங்களில், அவருடைய பதின் பருவத்திலேயே அவருக்கு மூன்று குழந்தைகள் - இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். ஆறு வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகளான சுவாதிக்கு அவரது 13 வயதில் திருமணம் நடைபெற்றது. நான்கு வருடங்களுக்கு பிறகு அவருடைய இளைய மகளான சீத்தலுக்கு 15 வயதில் திருமணம் ஆனது. ஸ்வாதிக்கு 4 வயதில் ஒரு மகளும் சீத்தலுக்கு ஒரு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.
கிராமப்புற மஹாராஷ்டிராவில் இருக்கும் பார்தாடே குடும்பங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் சகஜமானவை. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) 2015 -16 ஆம் ஆண்டுக்கான தரவுகள் மாநிலத்தில் கிராமப்புறத்தில் உள்ள 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. மேலும் கிராமப்புற மகாராஷ்டிராவில் உள்ள 10.4 சதவீதம் பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள்ளாகவே தாயாகவோ அல்லது கருவுற்றோ இருக்கின்றனர் என்று அந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் சட்டவிரோதமானது என்று பரவலாக அறியப்பட்டாலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அத்தகைய திருமணங்கள் பீட் போன்ற மாவட்டங்களில் இன்னமும் அதிகமாக நடைபெறுகிறது. ஏனெனில் அங்கு விவசாயத்தின் மூலம் வரும் வருமானமும் குறைவு. புலம்பெயர்தலும் அதிகம். பீடில் 20 - 24 வயதுக்குட்பட்ட 51.3 சதவீத பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று 2015-16 (NFHS) தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 18.2 சதவீதம் பேர் தாயாகவோ அல்லது கருவுற்றோ இருந்தனர் என்று அந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
புலம்பெயர்தல் மராத்வாடாவில் குழந்தை திருமணங்களை கட்டாயப்படுத்துகிறது. தொழிற்சங்க மதிப்பீடுகளின்படி - அறுவடை காலத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பீடை விட்டு புலம்பெயர்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் கோல்ஹாபூர், சங்கிலி மற்றும் சத்தாரா ஆகிய மாவட்டங்களுக்கு அல்லது கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்திற்கு கரும்பு வெட்டும் வேலைக்காக புலம்பெயர்கின்றனர். (மேலும் காண்க கரும்பு வயல்களுக்கான தொலைதூர பாதை)
மராத்வாடாவிலிருந்து பருவகால புலம்பெயர்வு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது காரணம் விவசாயத்திற்கான உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் கிட்டத்தட்ட தேங்கி நிற்கும் வருமானம் ஆகியவை. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் சம்பாப் பயிர்களுக்கான விலை கொள்கை (2017 -18) என்ற தலைப்பிலான அறிக்கை பருத்தி போன்ற பணப்பயிர் உட்பட கிட்டத்தட்ட ஒவ்வொரு பயிருக்கும் முதலீடு மற்றும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் பொருந்தாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை, சிறு விவசாயிகள் தங்கள் முதன்மை வருமான ஆதாரமாக விவசாயத்தை நம்பி இருக்க முடியாது என்பதற்கு மற்றுமொரு காரணமாக இருக்கிறது. இது புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது.
வேலைக்காக புலம்பெயரும் போது தங்களது மகள்களை கவனித்துக் கொள்வது குடும்பங்களுக்கு ஒரு கவலையாக இருக்கிறது என்று அகமது நகரை சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கல்வியாளரான ஹேரம்ப் குல்கர்னி கூறுகிறார். "மகள்களுக்கு பதின்ம வயது வரும்போது புலம்பெயர் பெற்றோர்கள் அவர்களது மகள்களின் பாதுகாப்பிற்காக கவலைப்பட தொடங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் இதன் மூலம் அவர்களது கடமையைச் செய்து விட்டதாக அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்", என்று அவர் கூறினார்.



