"மருந்துகளும் தீர்ந்துவிட்டது, பணமும் தீர்ந்துவிட்டது, எரிபொருளும் முடிந்துவிட்டது", என்று ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் நான் அவரை சந்தித்தபோது சுரேஷ் பகதூர் என்னிடம் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு விசில் மற்றும் லத்தியினை ஏந்தியபடி இரவு நேரங்களில் சுரேஷ் மிதிவண்டியில் வளையவந்து வீடுகளையும், கடைகளையும் பாதுகாத்து வருகிறார். அவரும் அவரது தந்தை ராம் பகதூரும் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.
மார்ச் 22 ஆம் தேதிக்கு பிறகு, அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தனது மிதிவண்டியை ஓரங்கட்டி வைத்துவிட்டு தனது தொலைபேசியில் கோவிட் 19 பற்றிய செய்திகளை தேடுவதிலும், உணவு, சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் வாங்குவதற்கும் தனது நேரத்தைச் செலவிட தொடங்கினார்.
23 வயதாகும் சுரேஷ், தம்மி ராஜூ நகர் பகுதியில் ஒரு வாடகை அறையில் தங்கி இருக்கிறார் அவருடன் 43 வயதாகும் சுபம் பகதூர் மற்றும் 21 வயதாகும் ராஜேந்திர பகதூர் ஆகியோரும் இருக்கின்றனர், இவர்கள் அனைவரும் அவரது தாயகமான நேபாளத்தில் உள்ள பஜாங் மாவட்டத்தில் இருக்கும் திக்லா கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள். ராம் பகதூர் பீமாவரம் பகுதியில் மற்றொரு வாடகை அறையில் தங்கியிருந்தார், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
அதுவரையில், ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களில் ராம் மற்றும் சுரேஷ் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வீடுகளில் இருந்து 10 முதல் 20 ரூபாயும், கடைகளிலிருந்து 30 முதல் 40 ரூபாயும் தங்களது ஊதியமாக வசூல் செய்வர். ஒவ்வொருவரும் 7,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்தனர். இது ஒரு முறை சாரா ஏற்பாடு என்பதால் அவர்களது வருமானம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். "சில சமயங்களில் 5,000 ரூபாய் என்ற நிலைக்கு கூட செல்லும்", என்று என்னிடம் பேசிய போது ராம் பகதூர் தெரிவித்தார். "இப்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது", என்றார்.





