இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த மேலும் 55 விவசாயிகள் இதே நிலையை தேடிக் கொண்டனர் என்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரவு. ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு தற்கொலை என உயர்ந்தது. 2016ஆம் ஆண்டில் நல்ல மழை பெய்தபோதும், வறட்சி குறைந்த பிறகும் இறப்பு விகிதம் குறையவில்லை.
மராத்வாடாவில் நல்ல பருவமழை இல்லாததும் விவசாயிகளின் தற்கொலைகளை, துயரங்களை தடுக்கத் தவறியதற்கு ஒரு காரணம். விதைப்பு காலத்தில் கடன் திரட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பில்லாததும் காரணம்.
யாரை அவர்கள் அணுகுவார்கள்? வங்கிகள் கடன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றன. பிராந்திய வங்கிகள் தீவிர பாகுபாடு காட்டுவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு சொல்கிறது. மார்த்வாடாவின் எட்டு மாவட்டங்களில் 1 கோடி 80 லட்சம் மக்கள் தொகை, அதுவே புனே மாவட்டத்தில் 90 லட்சம் தான் மக்கள்தொகை. ஆனால் வணிக வங்கிகள் (தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார்) மார்த்வாடாவுக்கு (ரூ. 45,795 கோடி) மார்ச் 2016 வரை வழங்கிய மொத்த வங்கிக்கடன் புனே மாவட்டத்தில் (ரூ. 140, 643 கோடி) வழங்கப்பட்ட முன்தொகை என்பது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு. பொருளாதார ரீதியாக ஈர்க்காதது, அப்பிராந்தியங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் செழிக்காததற்கு ஒரு காரணமாகிறது. இதனால் வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன.
அனைத்து இந்திய பணியாளர் வங்கி கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் பேசுகையில், மகாராஷ்டிராவின் 90 சதவீத வங்கித்துறை என்பது தானே, மும்பை, புனே ஆகிய மூன்று பிராந்தியங்களில் மட்டும் பரிமாற்றங்கள் நடைபெறுவதாகச் சொல்கிறார். “வளர்ந்த பிராந்தியங்களின் வளமையை வளர்ச்சியற்ற பிராந்தியங்களுக்கு பரிமாற்றம் செய்து இடைவெளியை நிரப்பும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும்,” என்கிறார் அவர். “மாறாக அவை இந்த இடைவெளியை நிலைக்கச் செய்கின்றன.”
பயிர்க்கடனையும், பருவ கடன்களையும் ஒன்றாக்கி விவசாய கடன் என்று வங்கிகள் மறுசீரமைப்பு செய்துள்ளன. பயிர்க்கடனுக்கான (விதைகள், உரங்கள் வாங்குவது போன்ற வேளாண்மை செயல்பாடுகளுக்கு) வட்டி விகிதம் 7 சதவீதம். அதில் 4 சதவீதத்தை மாநில அரசு செலுத்துகிறது. பருவக் கடன் (டிராக்டர்கள், இயந்திரங்கள் போன்ற முதன்மை முதலீடுகளுக்கு பயன்படுத்துவது) என்பதில் வட்டி விகிதம் இரு மடங்கு வசூலிக்கப்படும். மறுசீரமைப்பின் மூலம் வங்கிகள் இரண்டு கடன்களையும் ஒன்றாக்கி புதிய பருவ கடன் என்கின்றன. இது விவசாயிகளின் பாக்கிகளை பூதாகரமாக்கி புதிய கடன்கள் வாங்குவதற்கு தகுதியற்றவர்களாக வகைப்படுத்துகிறது.
ஒளரங்காபாத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர் பேசுகையில், மறுசீரமைப்பிற்கு எதிராக விவசாயிகளுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். “ஆனால் அனைத்து வங்கி அதிகாரிகளும் அப்படி செய்வதில்லை,” என்கிறார் அவர். “வீடுகளில் சோதனையை தவிர்க்க இதுபோன்ற கடன்களுக்கு செல்லுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.”
பாரம்பரியமாக கணக்கு வைத்துள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளை அணுகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். ஆனால் மராத்வாடாவின் ஆறு மாவட்டங்களில் உள்ள ஆறு வங்கிகளும் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டன, பெரும்பாலும் செல்வாக்குமிக்க கடனாளிகளிடம் கடனை திரும்பப் பெற முடியாத இயலாமை நிலைக்குச் செல்கின்றன. லத்தூர், ஒளரங்காபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் கூட நல்ல முறையில் செயல்படவில்லை.
இதனால் சந்திப் போன்ற விவசாயிகள் உடனடியாக பணத்தை பெறுவதற்கு தனியார் வட்டி கடைக்காரர்களை அணுகுகின்றனர். இதில் மாதம் 3-5 சதவீதம் வரை வட்டி பெருகுகிறது அல்லது ஆண்டிற்கு 40-60 சதவீதம் வரை செல்கிறது. எனவே நிர்வகிக்கக்கூடியதாகக் கூறப்படும் தொகை கூட, வட்டி சேர்க்கப்பட்டால், இறுதியில் அசல் தொகையைவிட பல மடங்கு அதிகமாகி விடலாம்.
பீட் மாவட்டம் அஞ்சன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது பக்வான் ஏதி, அவரது மனைவி சகர்பாய் தனியார் வட்டி கடைக்காரரை காண தயாராகிக் கொண்டிருந்தனர். “எனக்கு ஏற்கனவே ஹைதராபாத் வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் உள்ளது, தனியாரிடம் 1.5 லட்சம் வாங்கியுள்ளேன்,” என்கிறார் ஏதி. “என் இரு மகன்களின் கல்விக்கும் கொஞ்சம் பணத்தை செலவிட்டுள்ளோம். அவர்கள் புனேவில் படித்தனர். இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.”