அவர் பேச ஆரம்பித்தது பாதியிலேயே நிறுத்தினார். ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து மீண்டும் ஒரு முறை முயலுகிறார். அவரின் குரல் நடுங்குகிறது. தரையைப் பார்க்கிறார். தாடை ஆடியது. ஒரு வருடமாக தைரியமான போராட்டத்தை நடத்தி வருகிறார் அனிதா சிங். ஆனால் கணவரின் நினைவு அவருக்குள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. “சிறு சந்தோஷமான குடும்பமாக நாங்கள் இருந்தோம்,” என்கிறார் 33 வயது அனிதா. “என் கணவர்தான் எங்களின் நங்கூரம்.”
20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லகாவோட்டி கிராமத்து ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார் அனிதாவின் கணவரான 42 வயது ஜைகார்ன் சிங். ஏப்ரல் 2021-ல் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. “இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது,” என்கிறார் அனிதா. “கோவிட் இரண்டாம் அலை முழு வீச்சில் இருந்தபோது கூட ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அந்த நாட்களில் ஒன்றில்தான அவருக்கு கோவிட் தொற்றியிருக்க வேண்டும்.”
ஏப்ரல் 20, 2021 அன்று ஜைகார்னுக்கு தொற்று உறுதியானது. மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, நகரத்தின் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கைக் கிடைக்கவில்லை. “பல மருத்துவமனைகளில் நான் மன்றாடினேன். அவர்கள் இல்லை என்றனர்,” என நினைவுகூர்கிறார் அனிதா. “அவரின் உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியதும் பல பேரை நாங்கள் தொடர்பு கொண்டோம். உதவி ஏதும் கிடைக்கவில்லை. அவரை வீட்டிலேயே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.”
உள்ளூர் மருத்துவர் ஒருவர் காய்ச்சலுக்கும் இருமலுக்குமான சிகிச்சை அளித்தார். அனிதாவின் உறவினர்கள் எப்படியோ ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தனர். “அதை எப்படி பயன்படுத்துவது என எங்களுக்குத் தெரியவில்லை. நாங்களே வழி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். “தொடர்ந்து மருத்துவமனை படுக்கைக்கும் அலைந்து கொண்டிருந்தோம்.”
இந்திய சுகாதார கட்டமைப்பு கிராமங்களிலும் சிறு டவுன்களிலும் நொறுங்கிக் கொண்டிருப்பதை தொற்று பட்டவர்த்தனமாகக் காட்டியது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.02 சதவிகிதம் (2015-16-ல்) மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிலையில், மக்களுக்கு உதவ பெரிதாக அதில் எதுவும் இருக்கவில்லை. தேசிய சுகாதார நிலை 2017-ன்படி, நாட்டு மக்கள்தொகையில் ஒவ்வொரு 10,189 பேருக்கு ஒரு அலபதி மருத்துவர்தான் இருக்கிறார். ஒவ்வொரு 90,343 மக்களுக்கு ஒரே ஒரு பொது மருத்துவமனைதான் இருக்கிறது.







