"அச்சமில்லா சுதந்திரம்" மற்றும் "தண்டனையில்லா சுதந்திரப் பகுதி" போன்ற வாசகங்கள் பள்ளிச் சுவர்களில் காணப்படுகின்றன. இவைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முற்றுப் புள்ளியாகவே தோற்றமளிக்கிறது . இருப்பினும் தின்கியா மற்றும் கோவிந்த்பூரில் உள்ள இப்பள்ளிகளை காவல் துறையினர் பாஸ்கோவின் மிகப் பெரிய மின் மற்றும் எஃகு திட்டத்தின் கீழ் ஆக்ரமித்துள்ளதையும் அரசு பயிர் நிலங்களை எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது இந்த வாசகங்கள் புதிய பொருள் உள்ளதாய் தோற்றமளிக்கிறது.
இது போன்ற கட்டாய முறையில் நிகழ்த்தப்படும் நில அபகரிப்பை எதிர்த்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இதனால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறையத் தொடங்கியதும் ஒரிஸ்ஸா மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அஞ்சலி பெஹெரா அவர்களின் கோபத்துக்கு ஆளாகியது. பள்ளிகளில் குழந்தைகள் இருக்கவேண்டியது விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பது அமைச்சரின் அசைக்க முடியாத கருத்து . போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணத்தினாலே மட்டும் இவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்பது ஏற்புடையதல்ல என்பது இவரது நம்பிக்கை.
இந்த மாநிலத்தில் வகுப்பறையில் உள்ள கோடிக் கணக்கானவர்களுக்கு போதிய கல்வி கிடைத்திருக்க சாத்தியமில்லை. ஒரிஸ்ஸாவில் ஜூன் மாத இடையிலிருந்தே பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கப் படவில்லை என உச்ச நீதி மன்ற உணவு கமிஷனர் திரு பிராஜ் பட்நாயக் கூறுகிறார். கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த மத்திய அரசின் ரூபாய் 146 கோடிக்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
திரும்ப கிராமத்திற்கு நம் கவனத்தை கொண்டு சென்றால் காவல் துறையினர் இங்கு நடக்கும் போராட்டத்தை அடக்குவதற்காக பள்ளியில் உள்ள ஆறு வகுப்பறைகளில் நான்கினை ஆக்கிரமித்துள்ளார்கள் என பாலியா உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகிறார். 7 வது வரை வகுப்புகள் நடக்கும் இந்த பள்ளியில் ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் வருகின்றனர், நாங்களும் வருகை கணக்கீடு எடுக்கிறோம், பின்பு 1 முதல் 5 வது வகுப்பு மாணவர்களை அனுப்பிவிடுகிறோம். இவர்களுக்கு எவ்வாறு வகுப்பு நடத்துவது ? இப்படி பல பள்ளிகளை காவல் துறையினர் ஆக்கிரமித்துள்ளனர் . பலிதூத் பள்ளியைத் தவிர பலியா உள்பட நான்கு பள்ளிகளில் காவல் துறையினர் இருக்கின்றனர்.




