ஓர் உடைந்த கிளையை தரையில் அடித்துக் காட்டி தங்கம்மா ஏ.கே. தென்னை மரங்களுக்கு அடியில் தன் வரவை அறிவிக்கிறார். “அதிகமாய் வளர்ந்திருக்கும் இந்த நிலங்களுக்குள் எச்சரிக்கையாக நுழைவேன். குச்சியை அடித்து சத்தம் எழுப்புவேன். பாம்புகள் இருந்தால் ஓடி விடும்,” என்கிறார் அவர் உயர்ந்து நிற்கும் தென்னைகளுக்கு கீழே இருக்கும் காட்டுப்புற்கள், உடைந்த கிளைகள், அடர் கொடிகள் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் உயிரினங்களை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்தபடி.
எர்ணாகுளத்தின் வீட்டு வசிப்பிட காலனியில்தான் மரம், செடி அடர்ந்த இந்த வெற்று நிலம் இருக்கிறது. “நடந்தபடி (நல்ல) இளநீர் காய்களை கண்டுபிடிப்பது அதிர்ஷ்டம்தான்!” என்கிறார் 62 வயதான அவர். பராமரிக்கப்படாத பகுதிகளில் விழுந்து கிடக்கும் இளநீர் காய்களை சேகரித்து வருமானம் ஈட்டி அவர் வாழ்க்கை ஓட்டுகிறார். மலையாளிகளின் உணவில் இளநீர் எப்போதும் இடம்பெறும். அதனாலேயே அதற்கான தேவை வருடம் முழுக்க நிலவும்.
“தொடக்கத்தில் நான் இளநீர் காய்களை வேலை முடிந்தபிறகு இந்தப் பகுதியிலிருந்து (புதிய ரோடு சந்திப்பு) சேகரிப்பேன். ஆனால் இப்போது என் ஆரோக்கியம் குறைந்துவிட்டதால் வேலைக்கு போக முடியவில்லை,” என்கிறார் தங்கம்மா உயரமான புற்களுக்கு இடையே மெல்ல நடந்தபடி. அவ்வப்போது நின்று மூச்சு வாங்கிக் கொள்கிறார். கைகளை கண்களுக்கு மேல் வைத்து மதியவெயிலை மறைத்து மேலே காய்களை பார்த்துக் கொள்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு, மூச்சிரைப்பு, உடல் பலவீனம் மற்றும் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றால் தங்கம்மாவுக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. முழு நேர வீட்டுப் பணியாளராக இருந்த அவர் வேலையை விட நேர்ந்தது. மாத வருமானம் 6,000 ரூபாயும் நின்று போனது. வருமானம் தேவைப்படும் நிலையிலிருந்து தங்கம்மாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடல்ரீதியாக உழைப்பு அதிகம் தேவைப்படாத வீட்டில் தூசு சுத்தப்படுத்துவது, கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யத் தொடங்கினார். கோவிட் தொற்று வந்தபிறகு அந்த வேலையும் போனது.














