20 வயது வரை அங்காத் சலுங்கேவுக்கு நம்பிக்கை இருந்தது. பின்னர் அது அச்சத்திற்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் கழித்து, விரக்தி மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. இறுதியில், அங்காத் தோல்வியை ஏற்றுக்கொண்டார். இனி அவருக்கு வேலை கிடைக்காது என்கிற தோல்வி ஆகும்.
2003-ல் தனக்கு 18 வயதானபோது அங்காத், பீட் மாவட்டம் நாகபூர் கிராமத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீட் நகருக்கு கல்லூரி செல்வதற்காக வந்தார். “பீட்டில் எனக்கு வாடகை கொடுப்பதற்காக கூடுதல் பணத்தை எனது பெற்றோர்கள் அனுப்பினார்கள். அதற்காக கூடுதல் நேரம் வேலை செய்தார்கள். வட்டிக்காரரிடம் கடன் வாங்கினர். கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட மற்றச் செலவுகளுக்கு அவர்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் வரை செலவழித்துள்ளனர் .“
இளங்கலை படித்து முடித்தவுடன் அங்காத் மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கொண்டார். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் அவர், மாநிலத்தில் நிர்வாகம் மற்றும் குடிமையியல் அரசிதழ் பதிவு அதிகாரி, துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர், விற்பனை வரி ஆய்வாளர் போன்ற பல்வேறு பணிகளுக்குச் செல்ல முடியும். ஆனால், இத்தேர்வை எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை, காலியாக இருக்கும் பணியிடங்களைவிட கூடுதலாக இருக்கும். மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் வி.என்.மோர் கூறுகையில், ”அரசுப்பணிகளில் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் 12 முதல் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். ஆனால் பணியிடங்களோ 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மட்டும உள்ளது. அதில் 2 முதல் இரண்டேகால் லட்சம் பேர் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதிகிறார்கள். அதில் காலியிடங்கள் 300 முதல் 350 வரையே நிரப்ப வேண்டியிருக்கிறது. (மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையம் மட்டும் பல்வேறு பிரிகளில் 14 தேர்வுகளை நடத்துகிறது) குடிமைப்பணிகளில் 2017-18ம் ஆண்டு வெறும் 140 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.”
“நான் கடுமையாக உழைத்து நாள் முழுவதும் படித்தேன்“ என்று அங்காத் கூறுகிறார். அவருக்கு தற்போது 34 வயது. அவரது வயலில் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கிறார். “2007ல் நான் பீட் அரசு மருத்துவமனையில் குமாஸ்தா வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், எனக்கு சிபாரிசு செய்வதற்கு யாருமில்லை“ என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இதுபோன்ற பணிகள் அரசு நடைமுறைகளின் கீழ் செல்வதன் மூலம் நிரப்பப்படாது. சிபாரிசு மற்றும் தெரிந்தவர்களை பரிந்துரை செய்வதன் மூலம் மட்டுமே கிடைக்கக்கூடும்.





