நண்பகல். மகாராஷ்டிராவின் உல்லாஸ்நகர் தாலுகாவில் தூறல் நின்றிருந்தது.
தானே மாவட்டத்தின் உல்லாஸ்நகரிலுள்ள மத்திய மருத்துவமனை நுழைவாயிலுக்கு ஓர் ஆட்டோ சென்றது. வெள்ளை மற்றும் சிவப்பு ஊன்றுகோலை இடது கையில் பிடித்துக் கொண்டு, தியானேஸ்வர் ஆட்டோவிலிருந்து இறங்குகிறார். கூடவே அவரது மனைவி அர்ச்சனா அவரது தோளைப் பிடித்துக் கொண்டு இறங்குகிறார். அவரது செருப்பு சகதியில் நின்று தெறித்தது.
சட்டையின் இரண்டு பாக்கெட்டுகளிலிருந்தும் இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுக்கிறார் தியானேஸ்வர். அதில் ஒன்றை ரிக்ஷா ஓட்டுநரிடம் கொடுக்கிறார். ஓட்டுநர் மீதி சில்லரையைக் கொடுக்கிறார். சில்லரைக் காசைத் தொட்டுப் பார்க்கிறார் தியானேஸ்வர். “ஐந்து ரூபாய்,” என சொன்னபடி பாக்கெட்டுக்குள் போடும் அவர் பாக்கெட்டுக்கு காசு விழுவதை கூர்ந்து கவனிக்கிறார். 33 வயதான அவருக்கு விழிவெண்படலப் புண் வந்து மூன்று வயதிலேயே பார்வை போய்விட்டது.
அம்பர்நாத் தாலுகாவின் வங்கானி டவுனில் இருக்கும் அவர்களது வீட்டிலிருந்து உல்லாஸ் நகர் மருத்துவமனைக்கு 25 கிலோமீட்டர் பயணித்து அர்ச்சனாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வருகிறார்கள். வருவதற்கு மட்டும் ரிஷாவுக்கு 480லிருந்து 520 ரூபாய் வரை ஆகும். “நண்பரிடமிருந்து (இந்தப் பயணத்துக்காக) 1,000 ரூபாய் கடன் வாங்கினேன்,” என்கிறார் தியானேஸ்வர். “ஒவ்வொரு முறை (மருத்துவமனை வருவதற்கும்) நான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது.” இருவரும் மெல்ல எச்சரிக்கையாக சிறு சிறு அடியெடுத்து வைத்து, இரண்டாம் தளத்தில் இருக்கும் டயாலிசிஸ் அறையை நோக்கி நடக்கின்றனர்.
குறைபார்வை கொண்ட அர்ச்சனாவுக்கு இந்த வருட மே மாதத்தில் தீவிர சிறுநீரக நோய் மும்பையில் லோக்மான்ய திலக் பொது மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. “அவளின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன,” என்கிறார் தியானேஸ்வர். 28 வயது அர்ச்சனா, வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை எடுக்க வேண்டும்.
“சிறுநீரகங்கள் உடலின் முக்கியமான அங்கங்கள். கழிவையும் உடலின் அதிகமான நீரையும் வெளியேற்ற அவை பயன்படுகிறது. அவை செயலிழந்தால், உயிர்வாழ டயாலிசிஸ் செய்யப்பட வேண்டும். அல்லது உறுப்பு மாற்ற சிகிச்சை செய்யப்பட வேண்டும்,” என்கிறார் டாக்டர் ஹர்திக் ஷா. உல்லாஸ் நகர் மருத்துவமனையின் சிறுநீரக நோய் மருத்துவர். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 2.2 லட்சம் புதிய நோயாளிகள் சிறுநீரகநோயின் இறுதிக் கட்டத்தை அடைகின்றனர். 3.4 கோடி கூடுதல் டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கான தேவை வருடந்தோறும் ஏற்படுகிறது.









