இறந்த பெண்ணின் உறவினர்கள் "அவரின் உடலைச் சிதையில் இட்டு, எரிப்பதற்கு முன்னர் தயவுசெய்து இந்த சேலையை போர்த்த முடியுமா" என்று வேண்டுகோள் விடுத்தனர். மினுமினுக்கும் பச்சை சேலையை சந்திப்பன் வால்வ்விடம் கொடுத்தனர். சந்திப்பனுக்கு இந்த வேண்டுகோள் ஒன்றும் அசாதாரணமானதாகத் தோன்றவில்லை. அவரும் அவர்கள் தெரிவித்தவாறே செய்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஓஸ்மனாபாத் நகரில் உள்ள மயானத்தில், பதினைந்து சடலங்கள் எரியூட்டப்படுவதற்காக வரிசையாகக் காத்துக்கிடக்கிறது. வால்வ் இந்த மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர். அவர் தனது பி.பி.இ உடையை அணிந்து கொண்டு கையில் கையுறை அணிந்தவாறு இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ளக் காற்றுப்புகாத அளவிற்கு நன்றாக மூடப்பட்டுள்ள வெண் நிற பையின் மீது, அந்த சேலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "அந்த பெண்ணின் உறவினர்கள் எங்கே தங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிடுமோ என்று பயந்தனர்" என்று தெரிவித்தார்.
ஓஸ்மானாபாத் முனிசிபல் கவுன்சிலின் கீழ் பணிபுரியும் தொழிலாளாரான 45 வயதான வால்வ், கடந்த மார்ச் 2020 கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே, தொற்றால் இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்து வருகிறார். அவர் தற்போது வரை, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்திருக்கிறார். மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் அதிகம் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு நாளும் 15 முதல் 20 சடலங்கள் வரை மயானத்தில் தகனம் செய்வதற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். இதன்காரணமாக மயானத்தில் பணிபுரிந்த சந்திபனிற்கும், அவரது சக பணியாளர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. மக்கள் மத்தியில் பீதியும் கூடியிருக்கிறது.
"வைரஸ் தொற்றுப் பரவிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதைக்கூட தவிர்த்தனர்" என்கிறார் வால்வ். ”நாங்கள் எரியூட்டுவதற்கு முன்னர் சில முக்கியமானச் சடங்குகளை செய்யுமாறு எங்களிடம் கேட்டு கொண்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்றி இறந்தவர்களை எரியூட்டுவதை பார்க்கும் போது, நெஞ்சை உலுக்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும், இறந்தவர்களுக்கு அவர்களுக்கு நடக்கும் இறுதிசடங்குகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே, எங்களிடம் மிஞ்சியிருக்கும் ஆறுதல்" என்று மேலும் சொல்கிறார்.









