பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தலைமை ஆசிரியர் கூறிய இடத்திற்குச் சென்று பதற்றத்துடன் அமர்ந்துள்ளனர். அவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. அவர்களின் கல்விச் செயல்பாடு இதற்கு காரணமல்ல. அப்பிள்ளைகளை தண்டிப்பதற்காக அல்ல, உதவுவதற்காக தலைமை ஆசிரியர் அங்கு அனுப்பி வைத்துள்ளார். இது அவர்கள் பள்ளியின் வகுப்பறை கிடையாது. ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தின் மிகவும் ஏழ்மையான மண்டலங்களில் ஒன்றான அமதாகுரில் இந்த சிறிய நாடகத்தின் இரண்டாவது அங்கம் அரங்கேறியது.
அமதாகுரில் அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் 10 வயது தலித் மாணவி ஜே.இந்து உள்ளிட்ட ஐந்து ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பற்றி ஜனவரி 16ஆம் தேதி பாரி கட்டுரை வெளியிட்டது. ஆதார் அட்டைகளில் அவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் இவர்கள் ஐந்து பேருக்கும் இந்தாண்டு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்துவின் பெயர் ’ஹிந்து’ என்று அவரது அட்டையில் இடம்பெற்றுள்ளது. அவளது குடும்பத்தினர் புதிதாக திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ள போதிலும் அப்படியே உள்ளது.







