லால்மதி தேவியின் முப்பது வருட குடும்ப வாழ்க்கையில் நான்கு குழந்தைகள் பெற்றிருந்தாலும், அது அவரது ஆரோக்கியமான உடல்நலத்திற்கான உரிமையாக இன்றளவும் மாறவில்லை. (கட்டுரையின் துவக்கத்தில் உள்ள முகப்பு படம்). 51 வயதான லால்மதி தேவி சரண் மாவட்டம் பார்சா பகுதியின் பெல்டி கிராமத்தில் வசித்து வருகிறார். ஆறு மாதத்திற்கு முன்பு, தொடர்ச்சியாகக் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார். எனினும், அவரது கணவர் ராஜ்தேவ் வேலையில் மும்முரமாக இருந்ததன் காரணமாக லால்மதி தேவியை மருத்துவமனைக்கு(அது எந்த வகையானக் காய்ச்சல் என்று குறிப்பிட்டு உணரவில்லை) அழைத்து செல்லவில்லை. எனவே, கிராமத்தில் உள்ள போலி மருத்துவர்களிடமும், தங்களை மருத்துவ வல்லுனராக அறிவித்துக் கொள்ளக்கூடியவர்களிடமும் சிகிச்சைப் பார்க்கும் நிலைக்கு லால்மதி தேவி ஆளாகியுள்ளார்.
“சிலர் அது ஒவ்வாமையினால் ஏற்பட்டது தானாகவே சரி ஆகிவிடும் என்று கூறினர். ஆனால்,என் முகத்தில் ஏற்படத்தொடங்கிய அந்நோய், பின்னர் கால்கள், வயிறு என பரவத்தொடங்கியது. என் துயரத்தைப் பார்த்து என் கிராமத்து மக்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று மிகுந்த ஏமாற்றத்துடன் கூறினார். லால்மதி குடும்பத்திற்கு காலா-அசார் நோய் ஒன்றும் புதிதில்லை. அவரது இளைய மகன் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். லால்மதியின் கணவர் ராஜ்தேவ் கூறுகையில்; “அவனை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவன் தற்போது குணமடைந்துள்ளான்,” என பெருமைப்படக் கூறினார். ஒருவழியாக, அவரது மனைவிக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில்,அந்நோய்க்கு லால்மதி மேற்கொண்ட சிகிச்சையானது அவரை அமைதியற்றதாகிவிட்டது. எனவே, அவர் சிகிச்சையை நிறுத்திவிட்டார். அதுகுறித்து அவரது எவ்வித கவலையும் கொள்ளாத லால்மதியின் கணவர்,“அவள் மருந்து எடுத்துக் கொண்டால், அந்நோயிலிருந்து வெளியே வந்துவிடுவாள்” என்று தோளினை அசைத்துக் கொண்டே கவலையற்றுக் கூறினார். பி.கே.டி.எல் நோய்க்கான சிகிச்சை அபாயகரமானதாகவும், உடல்ரீதியான அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடியது. மேலும்,சிகிச்சைக்கும் நீண்ட நாட்கள் எடுப்பதால் குடும்பத்தின் துணையும் அவசியமானது. ஆனால், லால்மதிக்கு அது எதுவும் கிடைக்கவே இல்லை.
பீகார் மாநில அரசு 2020 ஆம் ஆண்டுக்குள் கலா-அசார் நோயை முழுமையாக ஒழித்துவிட உறுதிபூண்டுள்ளது. “சிறப்புத் தலையீடுகளின் வழியாக விளிம்புநிலையில் இருக்கக் கூடிய குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரை சென்றடைவதன் வழியாக காலா-அசார் நோயை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியும்” என்று டி.என்.டி.ஐ இந்தியா அமைப்பின் இயக்குனர் சுமன் ரிஜால் கூறியுள்ளார். பீகார் மாநில அரசு குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் நோய்யை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமானால் மேற்கூறப்பட்டுள்ளது மட்டுமே சிறந்த வழி. மேலும், பெண்களின் உடல்நலன் மீதான பாகுபாடு, புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை பெண்களுக்கானதாக மட்டுமே தனித்து விட்டுவிட முடியாது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்