அந்தப் பானை மேற்கூரையின் கீழே தொங்க விடப்பட்டுள்ளது.
அந்தப் பானையில் மூலிகைச் செடியோ, சமயக் கட்டுரைகளோ அல்லது அரிசியோ இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திறந்த முற்றத்தில் தோசை சுடும் அந்த இளம் பெண்ணான ராஜம்கிரி அதைப் பற்றி என்னிடம் சொல்லுவார் என்று நம்புகிறேன். ஆனால் அவரது மாமனாரான ஜி. சித்தையாவின் முன்னால் அந்தப் பெண் மிகவும் மரியாதையுடன் அமைதியாக இருக்கிறார்.
ராஜம், தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அழகிய பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தில் வசிக்கிறார். அவர் மேய்ப்பர் இனத்தை சேர்ந்த பெண். அவர்கள் அழகான சிவப்பு மற்றும் வெள்ளை பர்கூர் மாடுகளை வளர்கின்றனர் - அந்த மலையின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்ட மாடுகள் - இவை தமிழ்நாட்டின் ஐந்து பூர்வீக மாட்டினங்களில் ஒன்று. தினமும் காலையில் ஆண்கள் மாடுகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். நான் தற்போது பர்கூரிலிருந்து நாட்டு மாட்டு இனங்களை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக வந்துள்ளேன். நான் ராஜத்தை சந்தித்தபோது பெண்களும் குழந்தைகளும் வயதான ஆண்களுமே வீட்டில் இருந்தனர்.
மேலும் அந்தப் பானை மேற்கூரையின் கீழே தொங்கிக்கொண்டிருந்தது.




