அவர்கள் மக்களை பாதுகாக்காமல் வன உயிரினங்களை மட்டுமே பாதுகாக்க விரும்பினால் தேர்தலின் போது வாக்களிக்கச் சொல்லி அவர்கள் விலங்குகளிடமே சென்று கேட்டுக் கொள்ளட்டும். "நாங்கள் எங்களது வன உரிமைகளையும் பெறவில்லை, மனிதர்கள் என்ற அந்தஸ்தையும் கூட நாங்கள் பெறவில்லை", என்று கூறுகிறார் அனார் சிங் பதோல். ஆதிவாசி சமூகங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக மத்தியப் பிரதேச வனத் துறையின் அதிகாரிகள் கூறியதைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார், அவை அவர்களின் மூதாதையர்களின் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த வாரம், பரேலா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த, 35 வயதாகும் பதோல், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று தில்லியில் நடைபெற்ற வன உரிமை பேரணியில் கலந்து கொள்வதற்காக, மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கயிர்கேடா கிராமத்தில் இருந்து தில்லிக்கு வந்திருக்கிறார்.
வனத்துறையினர் தங்களின் சமூக வனப்பகுதிகளில் பயிர்களை மீண்டும் மீண்டும் அழிப்பதன் மூலம் ஆதிவாசிகளின் வன உரிமைகளை மறுக்கின்றனர், இதனால் ஆதிவாசிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக தினசரி ஊதியத்திற்கு வேலை செய்யும்படியான கட்டாயத்தில் இருக்கின்றனர், என்று அவர் கூறுகிறார். பின்னர், வனத்துறையினருக்கு வருவாயைக் கொடுக்கும் தோட்டங்களை அமைப்பதற்காக வனத்துறை அதிகாரிகளால் அந்த நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன. புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களில் புலிகள் காப்பகம் அமைக்க வனத்துறையினரால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது பரேலா ஆதிவாசி சமூகம், தங்களது சமுதாய வன நிலத்தில் விவசாய உரிமைகளை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போதேல்லாம் மத்தியப் பிரதேச வனத்துறை எவ்வாறு அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி அவர் பேசுகிறார். எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அண்டை கிராமமான சிவாலில் வன வெளியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அப்போது வனத்துறை அதிகாரிகள் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி சுடுவதற்கு அது வழிவகுத்தது. "நாங்கள் உணவுப் பயிர்களான சோயாபீன், மக்காச்சோளம், சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றை விளைவிக்கும் நிலத்தை, பெருநிறுவனங்களுக்கு தோட்டங்கள் அமைப்பதற்கு குத்தகைக்கு விடுவதற்கு தான் அரசாங்கம் விரும்புகிறது", என்று அவர் கூறுகிறார். "எங்களை அச்சுறுத்துவதற்காகவும் மற்றும் எங்களை இடம் பெயரச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காகவும் தான் எங்களது பயிர்கள் எரிக்கப்படுகின்றன. இந்த நிலத்திற்கான எங்களது உரிமைகோரல் இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.










