2016-ல் போராட்டி கிராமத்தில் சோனாபாய் போஸ்லே, அவரின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது முழுமையாக வளர்ச்சியடைந்த புலி ஒன்று அவரைத் தாக்கிக் கொன்றது. போராட்டி கிராமத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அடர்வனம் ஆரம்பித்துவிடுகிறது. போராட்டி மக்கள் இந்த வனத்தை விறகுக்காகவும், மேய்ச்சலுக்காகவும் நம்பி இருக்கின்றனர். காட்டில் விளையும் சில பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.
"சோனாபி போஸ்லேயை புலி காயப்படுத்தியதிலிருந்தே நாங்கள் அச்சத்தில் தான் இருக்கிறோம்" என்கிறார் ரமேஷ் கான்னி. இவர் உள்ளூர் சமூக, அரசியல் ஆர்வலர். இவர் தலைமையில் தான் போராட்டி மக்கள் வனத்துறை அதிகாரிகளையும், ஆட்சியரையும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தங்களின் குமுறல்களை முறையிட்டனர். "முன்பெல்லாம் வனவிலங்குகள் எங்களின் பயிர்களை நாசப்படுத்தின. இப்போது புலிகள் எங்களையே சேதப்படுத்துகின்றன" என்றார்.
50 பசுக்களும் ஒரு புலியும்
பல ஆண்டுகளாகவே ஆத்ராமின் வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது. அவர் தனது நாளை கால்நடைகளைக் குளிப்பாட்டுவதில் தொடங்குகிறார். பின்னர் அவற்றை கிராமத்துக்கு அருகே உள்ள நிலத்தில் மேய்க்கிறார்.
பொழுதுசாயும்போது திரும்புகிறார். பின்னர் அடுத்த நாளும் இதுவே தொடர்கிறது. ஒரு பசுமாட்டை மேய்க்க முன்பெல்லாம் மாதம் ரூ.100 வசூலித்தார். மேய்ச்சல் கூலியை உயர்த்தித் தருமாறு கோர நாங்கள் வலியுறுத்தினோம். மேய்ச்சலில் இருக்கும் அச்சுறுத்தலைக் குறிப்பிட்டு கூலி உயர்வு கோரச்சொல்கிறோம் எனக் கூறுகிறார் அவருடைய மனைவி சுலோச்சனா. கிராமவாசிகள் இப்போதெல்லாம் அவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ.150 கூலி வழங்குகின்றனர். இந்த 50 ரூபாய் கூலி உயர்வு தான் ஆபத்தை எதிர்கொள்வதற்கான கூலி என்கிறார் ஆத்ராம். "எப்போதும் சராசரியாக 50 மாடுகள் மேய்க்கிரென். இதை நான் நிறுத்திவிட்டால் என் பிழைப்புக்கு வேறு வழியில்லையே!" என்பது ஆத்ராம் ஒருநாள் வீடுதிரும்பியபோது குடும்பத்தினரிடம் கூறியது.
ஆனால் கிராமவாசிகள் ஆத்ராமுக்கு ஒரு சகாயம் செய்துள்ளனர். "ஒருவேளை நீங்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் மாடுகளைப் பற்றி கவலைப்படாமல் தப்பித்துவிடுங்கள்" என்று ஊர்க்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது தனக்குப் பெரிய ஆறுதல் என்றே ஆத்ராம் சொல்கிறார். "இது அவர்கள் என் மீது கொண்ட அக்கறை" என்று சிலாகிக்கிறார். "கடந்த இரண்டு ஆண்டுகளில் புலி நிறைய பசுமாடுகளைக் கொன்றுவிட்டது. எனது மாடு ஒன்று இறந்தாலும் நான் வருந்துவேன். அதேவேளையில் நான் பிழைத்திருப்பதில் மகிழ்கிறேன்" என்றார்.
ஆத்ராம் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. அவருடைய மனைவியும் தான். ஆனால் அவர்களின் பிள்ளைகள் படிக்கின்றனர். ஆத்ராம் அவரது குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். தன்னைப் போல் தினம் தினம் உயிருக்கு அஞ்சி வேலை செய்யக் கூடாது என நினைக்கிறார். திஷா பி.ஏ. முதலாம் ஆண்டு முடித்துள்ளார். வைஷ்ணவி 10-ம் வகுப்பு முடித்துள்ளார். மூவரில் கடைக்குட்டியான அனோஜ் 9-ம் வகுப்பு படிக்கிறார்.
கிராம அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரியும் சுலோச்சனா தனது குடும்ப வருமானத்திற்கு மாதம் ரூ.3000 பங்களிப்பாகக் கொடுக்கிறார். "ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் என் கணவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். ஒவ்வொரு மாலையிம் அவர் வீடு திரும்புவதைப் பார்க்கும் போது எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அதனால் அந்தப் புலிக்கு நான் நன்றி சொல்கிறேன்"
தமிழில்: மதுமிதா