பாத்திமா பீபியிக்கு பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த பின்னரே அவர் தனது ஐந்தாவது பிரசவத்திற்காக சமுதாய பிரசவ மையத்தை நாடியுள்ளார். அதுவரை அவரது மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உட்பட அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே பிரசவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த பீபியின் தாய் ஜமீலா “ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக அந்த ஆண் குழந்தை இறந்தது. எனவே இந்த முறை நாங்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், பீபியின் குடும்பத்தினர் அவர்கள் வசித்து வரும் ராம்பூர் கிராமத்தில் இருந்து வெறும் 30 நிமிட பயணத்தொலைவில் உள்ள வடக்கு 24 பர்கனஸ் மாவட்டத்தின் பயர்மரி கிராமத்திற்குச் செல்வதற்காக 700 ரூபாய் செலவு செய்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த பாத்திமா, ”எங்கள் கிராமத்தைச் சார்ந்த வறியப் பெண்கள் படகை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். உயர் அலை அடிக்கும் போது இது மிகவும் ஆபத்தானது. கடந்தாண்டு கூட, அதிகளவு பாரம் ஏற்றி வந்த படகொன்று உயர் அலையின் போது கத்கஹலி பகுதியில் கவிழ்ந்தது. சிலர் உயிரிழக்கவும் செய்தனர்” என்று கூறினார்.
பாத்திமா சந்தித்து வந்த பிரச்சனைகள் சுந்தர்பன் பகுதியில் கருவுற்ற பெண்கள் எப்போதும் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு உதாரணமாக உள்ளது. இது அனைத்து உடல்நலன் சார் சிக்கல்களுக்கும் பொருந்தக்கூடியது. இந்தத் தீவுப்பகுதியில் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ உதவி பெறுவது என்பது மலை மீது ஏறும் பயணம் போன்று தான் உள்ளது.
சுந்தர்பன் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் மருத்துவ உதவிக்காக முதலில் அணுகக்கூடிய அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களான துணை மருத்துவமனைகள்(sub-centers) சுந்தர்பன் பகுதியைச் சுற்றி மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. அதாவது 5000 பேருக்கு ஒரு துணை மருத்துவமனை என்ற வீதத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளையில், வடக்கு 24 பர்கனஸ் மாவட்டத்தின் பச்சிம் ஸ்ரீபதிநகர் மற்றும் புர்பா ஸ்ரீபதிநகர் ஆகிய கிராமங்களின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 9500 ( 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி). இந்த மொத்த மக்கள் தொகையானது அதிலிருந்து உயர்ந்துக்கொண்டும் இருக்கிறது. எனவே, 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் முறையான உபகரணங்கள் இல்லாத துணை மருத்துவமனைகளை முழுமையாக சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் மருத்துவ உதவிகளுக்காக உள்ளூர் பகுதிகளில் தங்களை மருத்துவர்களாக சுயபிரகடனம் செய்யக்கூடியவர்களை நாடி வருகின்றனர்.







