“என் 21 ஆண்டுகால விவசாய அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நெருக்கடியை நான் சந்தித்தது கிடையாது“ என்கிறார் சித்தர்காடு கிராம தர்பூசணி விவசாயி ஏ. சுரேஷ் குமார். இப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளைப் போன்றே 40 வயதான சுரேஷ் குமாரும் பட்டத்தின் தொடக்கத்தில் நெல் பயிரிடுகிறார். குளிர் காலத்தில் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்திலும், 1,859 பேர் வசிக்கும் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் சித்தாமூர் வட்டாரத்தில் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து 18.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் அவற்றில் தர்பூசணி பயிரிடுகிறார்.
“தர்பூசணி 65 முதல் 70 நாட்களில் தயாராகிவிடும். அறுவடை முடிந்து பழங்களை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவற்றை அனுப்ப தயாராக இருந்தோம். மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அறிவித்துவிட்டனர்” என்கிறார் அவர். “இப்போது அவை அழுகும் நிலையில் உள்ளன. சாதாரணமாக ஒரு டன்னுக்கு ரூ. 10,000 வரை வியாபாரிகள் கொடுப்பார்கள், ஆனால் இந்தாண்டு ரூ. 2000க்கு மேல் தரக் கூட யாரும் முன்வரவில்லை.”
தமிழ்நாட்டில் தமிழ் மாதங்களான மார்கழி, தையில் தான் தர்பூசணி பயிரிடப்படுகின்றன. அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம். இப்பருவ காலத்தில் தான் இப்பகுதியில் தர்பூசணி நன்கு விளையும். கடுமையான வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். 6.93 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் 162.74 ஆயிரம் மெட்ரிக் டன் பழங்களை உற்பத்தி செய்து நாட்டின் தர்பூசணி அதிகம் விளைவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை தமிழ்நாடு பெறுகிறது.
“எனது வயலில் பல இடங்களில் தர்பூசணி பயிரிட்டுள்ளேன். அவற்றை இரண்டு வார இடைவேளையில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு தயாரான பிறகு சில நாட்கள் விட்டால் கூட பழங்கள் அழுகிவிடும்” என்கிறார் குமார் (கவர் படத்தில் மேலே உள்ளவர்). “ஊரடங்கு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, முதல் அறுவடை தயாரானபோது, (மார்ச் மாதம் கடைசி வாரம்), பழங்களை வாங்க வியாபாரிகளும், பழங்களை எடுத்துச் செல்ல லாரி ஓட்டுநர்கள் முன்வரவில்லை.”
சித்தாமூர் தொகுதியில் குறைந்தது 50 தர்பூசணி விவசாயிகள் இருக்கக்கூடும் என்கிறார் குமார். அவற்றை அறுவடை செய்யாமல் அழுகவிட வேண்டும் அல்லது மிக குறைந்த விலைக்கு விற்க வேண்டும்.






