சவிந்தானேயில் குளிர்ந்த ஏப்ரல் இரவு அதிகாலை 2 மணி. மேற்கு மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் ஷிரூர் தாலுகாவில் உள்ள இந்த கிராமத்தின் கோயிலுக்கு எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஒளிரும் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடும் பெண்களைக் கண்டு இந்த கிராமமே உயிரோட்டமாக உள்ளது. ஆனால் லாலன் பஸ்வானும் அவரது சக ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் பார்வையாளர்களுக்கு மத்தியில் ஆரவாரம் செய்யும் ஆண்களிடமிருந்தும், ஒலிபெருக்கிகளின் சத்ததிலிருந்தும் விலகிச் சென்று ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் சிலர் தங்களது தொலைபேசிகளில் திரைப்படத்தைப் பார்த்து நேரத்தைக் கடத்துகின்றனர்.
"இந்த வேலை மிகவும் களைப்பானதாக இருக்கிறது. நாங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோருகிறார்கள்", என்கிறார் லாலன் பஸ்வான். இப்போது 19 வயதாகும், லாலன் ( கவர் படத்தில் இருப்பவர்) அவரது 13 ஆவது வயதில் இருந்து 'மங்கலா பன்சோட் மற்றம் நிதின் குமார் தமாஷா மண்டல்' உடன் பணியாற்றி வருகிறார். 30 தொழிலாளர்களைக் கொண்ட குழுவில் அவரும் ஒருவர் - இதில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது வயது 15 முதல் 45 வரை இருக்கிறது - இவர்கள் அனைவரும் உத்திர பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தின் மால் தொகுதியிலுள்ள மாலிகாபாத் தாலுகாவை சேர்ந்தவர்கள். இந்தக் குழுவில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினராகவோ அல்லது ஏதேனும் ஒரு சமூகப் பின்னலின் மூலம் தொடர்பு உடையவர்களாகவோ இருக்கிறார்கள்.
இவர்கள் நிகழ்ச்சிகளுக்கு மேடை மற்றும் கூடாரங்களை அமைக்கின்றனர், ஏனெனில் தமாஷா குழு ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். செப்டம்பர் முதல் மே வரையிலான எட்டு மாதங்களில், குறைந்தது 210 தடவையாவது அவர்கள் இதைச் செய்கிறார்கள் - அதுவே தமாஷாவிற்கான காலம் - இது மகாராஷ்டிராவின் ஒரு நாட்டுப்புற கலை வடிவம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் அமைக்கப்படும் வெளிப்புற மேடையில் இது நிகழ்த்தப்படுகிறது. இது பாடல் மற்றும் நடனம், சிறு மற்றும் பெரு நாடகங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்குத் தொகுப்பாகும். இந்தக் குழுவில் கலைஞர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், வயர் மேன்கள், மேலாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.










