தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் கும்மடிடாலா வட்டாரத்தில் உள்ள டோமாடுகு கிராம செங்கல்சூளையில் வைதேகியும், அவரது கணவரும் பத்தாண்டுகளாக வேலை செய்கின்றனர். நுவாபடா மாவட்டம் குரும்புரி ஊராட்சியிலிருந்து ஆண்டுதோறும அவர்கள் இங்கு வருகின்றனர். “நாங்கள் சேத்திடம் இருந்து ரூ.20,000 முன்பணம் பெற்றோம்,” என்கிறார் வைதேகி. கூடுதலாக சூளை உரிமையாளர் தினந்தோறும் ரூ.60 உணவுக்கு தருகிறார். “தயவுசெய்து சேத்திடம் குறைந்தது ரூ.80 கொடுக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் நாங்கள் அரை வயிற்றுடனாவது தூங்க முடியும்.”
தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி, சங்காரெட்டி, யாததரி புவனகிரி மாவட்டங்களில் உள்ள செங்கல்சூளைகளுக்கு மறுமுறை சென்றபோது, 2017ஆம் ஆண்டு நான் வைதேகி குடும்பத்தைச் சந்தித்தேன்.
இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன், 1990களில் காலாஹண்டி,(இப்போது நுவாபடா மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது) அருகில் உள்ள பொலாங்கிர் (அல்லது பாலாங்கிர், இப்போது சோனிப்பூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு சுபர்னப்பூர் என அழைக்கப்படுகிறது) புலம்பெயர்வு குறித்து ஆராய்ந்து, செய்தி சேகரித்தபோது, நான் நான்கு வகையான புலம்பெயர்வுகளை கடந்து வந்தேன்:
தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், உணவக தூய்மையாளர்கள் மற்றும் பிற வடிவிலான வேலைக்கு ராய்ப்பூர் நகருக்கு (இப்போது சத்திஸ்கரின் தலைநகரமாக உள்ளது) புலம்பெயர்ந்தவர்கள்; நல்ல பாசன வசதிகள் நிறைந்த பர்கார், சம்பல்பூர் மாவட்டங்களுக்கும், டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு கட்டுமானத் தொழிலாளர்களாகச் சென்ற இளைஞர்கள்; ஆந்திர பிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்குச் சென்ற குடும்பங்கள் (கடலோர ஒடிசாவிற்கும் பிறகு சென்றனர்).

















