தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள குடும்பத்தினர் தொடர்ந்து அழைப்பதாக சோமா கடலி சொல்கிறார். “நான் நன்றாகவே இருப்பேன்,” என அந்த 85 வயதுக்காரர் அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.
அகோலே தாலுகாவின் வராங்குஷி கிராமத்தை சேர்ந்த விவசாயியான அவர், மகாராஷ்டிராவின் அகமது நகரின் அகோலேவிலிருந்து லோனி வரையிலான விவசாயிகளின் மூன்று நாட்கள் (ஏப்ரல் 26-28) நடைபயணத்தில் பங்கேற்க வந்திருக்கிறார். “என் மொத்த வாழ்க்கையையும் வயல்களில்தான் கழித்தேன்,” என்கிறார் அவர் வயதானாலும் அங்கிருக்க வேண்டிய அவசியத்தை விளக்கி.
2.5 லட்ச ரூபாய் கடனில் இருக்கும் அவர் சொல்கையில், “70 வருடங்கள் செய்தும் விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாமலிருப்பேன் என நான் நினைத்ததில்லை.” மகாதேவ் கோலி ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த கடலிக்கு அவரது கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. தற்காலத்தில் வானிலை அடைந்திருக்கும் நிச்சயமற்றதன்மையை முன்னெப்போதும் பார்த்ததில்லை என்கிறார் அவர்.
“எனக்கு மூட்டு வலி இருக்கிறது. நடந்தால் மூட்டு வலிக்கும். காலையில் விழிக்க வேண்டுமென தோன்றாது. ஆனாலும் நானும் நடப்பேன்,” என்கிறார் அவர்.












