மாம்பூக்கள் பூக்க சரியான தட்பவெப்பம் 25-30 டிகிரி செல்சியஸ் என்கிறார் தோட்டக்கலை அறிவியலாளரான சங்கரன். “பிப்ரவரி 2023-ல், இரவு பகல் வெப்பநிலையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு இருந்தது. மரங்களால் இதை கையாள முடியவில்லை,” என்கிறார் அவர்.
கடந்த சில வருடங்களாக மாம்பழ விவசாயம் உவப்பற்ற விஷயமாக மாறிக் கொண்டிருக்கையில், 2014ம் ஆண்டில் எடுத்த முடிவுக்காக வருத்தப்படுகிறார் ஸ்ரீராமமூர்த்தி. அனகப்பள்ளி டவுனுக்கு அருகே இருந்த 0.9 ஏக்கர் நிலத்தை அந்த வருடம் விற்று, ஆறு லட்ச ரூபாயை முதலீடாக போட்டு பொமுலா பீமாவரத்தில் மாந்தோப்பை வாங்கினார் அவர்.
அம்முடிவை விளக்கும்போது, “எல்லாருக்கும் மாம்பழங்கள் பிடிக்கும். எனவே அவற்றின் தேவை எப்போதும் இருக்கும். மாம்பழ விவசாயம் எனக்கு போதுமான அளவுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்குமென நம்பினேன்,” என்கிறார் அவர்.
அப்போதிலிருந்து லாபமீட்ட முடியவில்லை என்கிறார் அவர். “2014-க்கும் 2022-க்கும் இடையே மாம்பழ விவசாயத்திலிருந்து (எட்டு வருடங்களில்) என் மொத்த வருமானம் ஆறு லட்ச ரூபாயைத் தாண்டவில்லை,” என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி. நிலத்தை விற்க முடிவெடுத்ததற்கு வருத்தப்பட்டு சொல்கையில், “நான் விற்ற நிலத்துக்கு இன்று பெருமதிப்பு. மாம்பழ விவசாயம் நான் தொடங்கியிருக்கக் கூடாது,” என்கிறார் அவர்.
வானிலை மட்டும் காரணமல்ல. மாமரங்கள் நீர்ப்பாசனத்தை சார்ந்தவை. நாகராஜுவிடமும் ஸ்ரீராமமூர்த்தியிடமும் ஆழ்துளைக் கிணறுகள் இல்லை. 2018ம் ஆண்டில் 2.5 லட்ச ரூபாய் செலவழித்து ஸ்ரீராமமூர்த்தி ஆழ்துளைக் கிணறு தோண்ட முயன்றார். ஆனால் பலனளிக்கவில்லை. ஒரு சொட்டு நீர் கூட அதில் கிடைக்கவில்லை. நாகராஜு மற்றும் ஸ்ரீராமமூர்த்தி ஆகியோரின் தோப்புகள் இருக்கும் புட்சியாபேட்டா மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக 35 ஆழ்துளைக் கிணறுகளும் 30 கிணறுகளும் இருக்கின்றன.
பூக்கள் காயும் பிரச்சினையை, தொடர்ந்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது மூலம் தீர்த்துவிட முடியும் என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி. வாரத்துக்கு இரண்டு நீர் டாங்குகளையும் அவர் வாங்குகிறார். மாதத்துக்கு 10,000 ரூபாய் செலவாகிறது. “ஒவ்வொரு மரத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் நீராவது தினமும் தேவை. ஆனால் நான் வாரத்துக்கு இருமுறைதான் நீர் பாய்ச்சுகிறேன். என்னால் முடிந்தது அவ்வளவுதான்,” என்கிறார் ஸ்ரீராமமூர்த்தி.
மாமரங்களுக்கு நீர் பாய்ச்ச, நாகராஜு இரண்டு நீர் டாங்கிகளை ஒவ்வொரு வாரமும் வாங்குகிறார். ஒரு நீர் டாங்கிக்கு 8,000 ரூபாய் செலவு செய்கிறார்.