2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.
மணி காலை 11:40 ஐ தாண்டி விட்டது, அடுத்து வரும் நிகழ்ச்சி , வேகத்தை பற்றியது என்று அறிவிக்கிறார் கடல் ஓசை வானிலை நிலையத்தைச் சேர்ந்த A. யஷ்வந்த். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறிப்பாக கடந்த வாரத்திலிருந்து கச்சான் காற்று (தெற்கில் இருந்து வருவது) மிகவும் தீவிரமடைந்துள்ளது. காற்றின் வேகமானது மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது. ஆனால் இன்று, அது மீனவர்களுக்கு உதவும் விதமாக மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைந்துள்ளது.
இது தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாம்பன் தீவு மீனவர்களுக்கு மிகச்சிறந்த செய்தியாகும். "எந்த பயமும் இல்லாமல் அவர்கள் கடலுக்குச் செல்லலாம்" என்று அர்த்தம் என்று மீனவரான யஷ்வந்த் விளக்குகிறார். மேலும் அவரே கடல் ஓசையின் வானொலி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார், இது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சமூக வானொலி நிலையம் ஆகும்.
ரத்த தானம் குறித்த சிறப்பு ஒலிபரப்பின் முன்னோட்டமாக யஷ்வந்த் வானிலை அறிக்கையை வாசிக்கிறார்: "வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது, எனவே போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள், வெயிலில் யாரும் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்துகிறார்.
இது ஒரு தேவையான முன்னெச்சரிக்கையாக இருக்கிறது, ஏனெனில் இப்போது யஷ்வந்த் பிறந்த 1996 விட, மிக அதிக வெப்ப நாட்களை பாம்பன் காண்கிறது. அப்போது இத்தீவில் வருடத்திற்கு 162 நாட்கள் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை தொட்டோ அல்லது தாண்டியோ இருக்கும். அவருடைய தந்தை அந்தோணி சாமி, இன்னும் முழுநேர மீனவரான அவர் பிறந்த 1973இல், வருடத்திற்கு 125 வெப்பமான நாட்களே இருந்தது. ஆனால் இன்று அது வருடத்திற்கு 180 நாட்கள் ஆக அதிகரித்துள்ளது என்கிறது கடந்த ஜூலையில் வெளிவந்த நியூயார்க் டைம்ஸின் காலநிலை மற்றும் புவிவெப்பமயமாதல் பற்றிய ஊடாடும் கருவியின் கணக்கீடு.
எனவே, யஷ்வந்தும் அவரது சகாக்களும் வானிலையைப் பற்றி மட்டுமல்லாமல் பருவநிலை பற்றியும் புரிந்து கொள்ள பெரிதும் முயற்சித்து வருகின்றனர். அவரது தந்தையும் அவரைப் போன்ற சக மீனவர்களும்,- இத்தீவில் உள்ள மிக முக்கிய இரு நகரங்களான -பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் குறைந்தபட்சம் 83,000 பேர் இருப்பர், இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள இவர்களை நாடுகின்றனர்.









