“யாக் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. பீடபூமியின் கீழ்ப்புறத்தில், சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் வெகு சில யாக் மாடுகளையே பார்க்க முடிகிறது,” என்கிறார் பத்மா துமோ. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக யாக் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்
சன்ஸ்கர் வட்டாரத்தில் உள்ள அப்ரன் கிராமத்தைச் சேர்ந்தவரான பத்மா, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 120 மாடுகளுடன், வானுயர்ந்த, உறைபனித் தட்பவெட்பம் நிலவும் லடாக் மலைகளின் வழியாக பயணம் செய்கிறவர். அந்த மலைகளில் தட்பவெட்பம் மைனஸ் 15 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும்.
இத்தகைய உறைபனி நிலைமைகளில் யாக் மாடுகள் எளிதாக தகவமைந்து வாழ்கின்றன. ஆனால், வெப்பநிலை 13 டிகிரி செல்ஷியசுக்கு மேலே போனால், அவற்றால் வாழ முடியாது.
ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில் சன்ஸ்கர் பள்ளத்தாக்கில், பீடபூமியின் கீழ்ப்புறத்தில், கோடைக்காலத்தில் வெப்ப நிலை 25 டிகிரிக்கு மேல், சில நேரங்களில் 32 டிகிரி செல்ஷியஸ் வரையில் கூட செல்கிறது. “கோடை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் இடையில் தட்பவெட்ப நிலையில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது,” என்கிறார் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஓட்டுநர் டென்சின் என்.
வழக்கத்துக்கு மாறான வெப்ப நிலை, யாக் மாடுகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி 2012 – 2019 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் இவற்றின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்தது (20-வது கால்நடை கணக்கெடுப்பு).























