ராணுவத்தில் சேரும் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தபோது, சூரஜ் ஜாட்டி இன்னும் பதின்வயதுகளை எட்டியிருக்கவில்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அவரது தந்தை ஷங்கர், மகனின் விருப்பத்தை கேட்டு பெருமையும் சந்தோஷமும் கொண்டார்.
மகாராஷ்டிராவின் சங்க்லி மாவட்டத்திலுள்ள பாலஸ் நகரத்து பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி வகுப்புக்கிடையே பேசிய 19 வயது சூரஜ், “என்னை பொறுத்தவரை என் வீட்டுச் சூழலில் அதுதான் உகந்த விஷயமாக இருந்தது,” என்கிறார். “எனக்கு நினைவு தெரிந்தவரை, வேறு எதையும் நான் யோசித்ததில்லை.” மகனின் முடிவில் ஷங்கருக்கு சம்மதம்தான். ஒரு தந்தையாக அவரையும் தாண்டிய சம்மதம் அவருக்கு தேவைப்பட்டது.
பத்தாண்டுகள் கூட ஆகவில்லை. மகனின் விருப்பம் நிறைவேறுமா என உறுதியாக தெரியாத கட்டத்தை அடைந்திருந்தார் ஷங்கர். பெருமை கொண்டிருந்த தந்தை என்கிற இடத்திலிருந்து சந்தேகம் கொண்டவராக சில வருடங்களில் அவர் மாறியிருந்தார். சரியாக சொல்வதெனில் 2022ம் ஆண்டின் ஜூன் 14ம் தேதி.
அந்த நாளில்தான் ஓர் ஊடக சந்திப்பில் பாதுகாபு அமைச்சர் ராஜ்நாத் சிங், “அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னி வீரர்களாக ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படும்,” எனக் கூறினார்.
திட்டம் அறிமுகப்படுத்துவத்ற்கு முன், சராசரியாக 2015-2020 வருடங்களில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இளையோரின் எண்ணிக்கை 61,000 ஆக இருந்தது. 2020ம் ஆண்டில் தொற்று வந்ததும் ஆட்சேர்ப்பு நின்றுபோனது.
அக்னிபாத் திட்டம் அக்னிவீரர்களாக 46,000 இளையோரை ராணுவத்தில் சேர்க்கும். 17.5 முதல் 21 வயதுக்குள்ளோர் இணையலாம். 4-5 வருடங்கள் வயது குறைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவிக்கை தெரிவித்தது.
காலம் முழுக்க ராணுவத்தில் இருக்க முடியாது. இத்திட்டத்தின்படி நான்கு வருடம்தான் இருக்க முடியும். அந்த நான்கு வருட காலம் முடிகையில், 25 சதவிகித பேருக்குதான் ராணுவத்தில் நிரந்தர பணி கிடைக்கும்.










