தனது தாத்தாவின் யக்ஷகானா நடன அசைவுகளை மூகாம்பிகா செய்து பார்த்தபோது, “அவர் கோபமடைந்து என்னை திட்டினார்.” கடலோர கர்நாடகாவிலும், கேரளாவின் காசர்கோட்டிலும் இந்த நாட்டுப்புற நடனத்தை பெண்கள் அரங்கேற்ற முடியாது என்று அவர் அந்த வளரிளம் வயது பெண்ணை எச்சரித்தார்.
தற்போது 75 வயதாகும் மூகாம்பிகா இளம்பெண்ணாக இருந்தபோது, உடுப்பி மாவட்டம், மார்வி என்ற தனது கிராமத்தில் யக்ஷகானா நடன நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டார். பொழுதுசாயும் நேரத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடைபெறும். இதைக் காண பெண்கள், குடும்பம் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் பெருங்கூட்டமாக சென்றதை அவர் நினைவுகூருகிறார். நாடகத்தை பார்த்துவிட்டு தனது வீட்டின் முன்புறம் உள்ள இடத்தில் போர்வை அல்லது துண்டுகளை நடனத்திற்கான ஆடையாக சுற்றிக் கொண்டு தோழிகளிடம் நாட்டிய நாடகமாக ஆடிக் காட்டுவார்.
“என் தாத்தா வீட்டில் இல்லாதபோது வீட்டின் முன்புறம் நாங்கள் நடனமாடி பார்ப்போம்,” என்கிறார். “யக்ஷகானா பெண்களுக்கானது அல்ல என அவர் நினைத்தார்.”
யக்ஷகானா என்றால் ‘தெய்வங்களின் பாடல்கள்’ என்றுப் பொருள். இக்கலை பல நூற்றாண்டுகளாக கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் இதிகாசங்களின் கதைகளும் இசை, நடனம், வசனம், விவரணை மூலம் நிகழ்த்தப்படுகிறது. அப்பகுதியின் முக்கிய கோயில்களில் யக்ஷகானா விழா அடிக்கடி நடத்தப்பட்டது.
துடிப்பு மிக்க இந்த ஆட்டத்தை அப்பகுதியில் கண்டு கலே என்கின்றனர். அதன் பொருள் 'ஆண்களின் கலை வடிவம்.' சுழன்று, தாவி ஆடும் இந்நடனத்திற்கு உடல் வலிமையும், சுறுசுறுப்பும் அதிகம் தேவைப்படுவதால் ஆண்களின் உலகமாக இது பார்க்கப்படுகிறது. எனவே பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்தனர்.
“பார்வையாளர்களுக்கு நாடகத்தின் கதைகள் ஏற்கனவே தெரியும்,” என்கிறார் யக்ஷகானாவின் மூத்த கலைஞரும், யக்ஷகானா அகாடமியின் முன்னாள் தலைவருமான எம்.எல்.சமகா. “ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய வெளிச்சத்தில் அவற்றை காண்பதோடு, புது அனுபவத்தையும் பெறுகின்றனர். ஒரு நடிகர் வெவ்வேறு கதாபாத்திரங்களை எவ்வாறு கையாளுகிறார் என்பதைக் காண அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.”














