மீண்டும் இங்கு வரும் காவல்துறை உறுதிமிக்க மக்களை எதிர்கொள்வார்கள். தென் கொரிய பெரு நிறுவனத்திற்காக வழங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த எரிசக்தி மற்றும் எஃகு ஆலைக்காகவும் தனியார் துறைமுகத்திற்காகவும் மாநில அரசு தங்களின் விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவதை உறுதியுடன் எதிர்க்க உள்ளார்கள். இந்தத் திட்டமானது, 60 கோடி டன் இரும்பு உலோகத்தைத் தோண்டி எடுப்பதற்கு அனுமதிக்கும்.
வெற்றிலைத் தோட்டங்கள்
இங்குள்ள மக்கள் ஒரிசாவின் வசதியான விவசாயிகள் ஆவர். வெற்றிலைத் தோட்ட (வெற்றிலை) பொருளாதாரமே அவர்களின் வருவாய்க்கான மையமாக உள்ளது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கைப்படியே இந்தத் திட்டம் வரவுள்ள இடத்தில் மட்டும் 1,800 வெற்றிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள வெற்றிலை விவசாயிகள் அந்த எண்ணிக்கை 2,500 என்கின்றனர். அவற்றில் தின்கியா மற்றும் கோவிந்த்பூர் ஆகிய கிராமங்களில் மட்டும் சுமார் ஆயிரம் தோட்டங்கள் உள்ளன. அவர்களின் தினக் கூலி என்பது 200 ரூபாய் மற்றும் நல்ல சாப்பாடு ஆகும். இதுவே இந்த மாநிலத்தின் விவசாயத் துறையில் மிகவும் அதிகப்படியான வருமானம் ஆகும். இது புவனேஷ்வரில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தைவிட அதிகமாகும். அத்துடன் ஒரிசாவின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MNREGS) வருமானத்தைவிட இருமடங்கு வரை இருக்கும். வெற்றிலைத் தோட்டத்தில் உள்ள சில வேலைகளுக்கு 450 ரூபாய் மற்றும் உணவு கிடைக்கும். ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பகுதியே உள்ள சிறிய வெற்றிலைத் தோட்டம் மூலம் ஒரு வருடத்தில் 540 பணி நாட்கள் வரை கிடைக்கும். இவை, ஒரு குடும்பத்தின் 600 பணி நாட்களைச் சேர்க்காமல் உள்ளவை. சில நிலமற்ற பணியாட்கள் மீனவத் தொழில் செய்வதன் மூலம் மேலும் வருமானம் ஈட்டுகின்றனர். போஸ்கோவின் தனியார் துறைமுகம் ஜடாதாரியில் வந்தால் அந்த வருமானம் இல்லாமல் போய்விடும். எனவே, இத்திட்டங்கள் வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும் என்பதை பணியாளர் பற்றாக்குறைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் பெரிய தேவை இல்லாததையும் சுட்டிக்காட்டி அங்குள்ள மக்கள் கிண்டல் செய்கின்றனர். வர்த்தகர்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் ஆபத்தானதாகக் கருதும் இத்திட்டத்திற்காகவும் அர்த்தமற்றதாக அவர்கள் கருதும் இழப்பீட்டிற்காகவும் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கத் தயாராக இல்லை.
வழக்குகளும் கைதாணைகளும்
மேலே அமைதியான சூழல் நிலவினாலும் போஸ்கோ எதிர்ப்பு போராட்டத்தை அரசு கையாளும் விதத்தால் பின்புலத்தில் பெரிய பதைபதைப்பு உருவாகிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மீது அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் – பல கைதாணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும் – பலரால் ஐந்து வருடங்களுக்கு மேலாகத் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. “பிற கிராமங்களில் உள்ள தங்கள் உறவினர்களின் திருமணங்களுக்குப் பலரால் செல்ல முடியவில்லை. உடம்பு முடியாமல் உள்ள தங்கள் உடன்பிறப்புகள் அல்லது பெற்றோர்களைக்கூட அவர்களால் பார்க்க முடிவதில்லை,” என்று காவல்துறைக்கு எதிராக தின்கியா மற்றும் கோவிந்த்பூர் கிராமங்களைப் பாதுகாக்கும் “மனிதச் சுவர்” போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது ஒருவித முற்றுகை உணர்வைத் தருகிறது.
அபய் சாஹூ மீது 49 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றை எதிர்த்துப் போராடி சௌத்வார் சிறையில் 10 மாதங்கள் இருந்துள்ளார். “போஸ்கோவை எதிர்த்ததற்காக மொத்தமாக இங்குள்ள ஆயிரம் பேர் மீது 177 வழக்குகள் பதியப்பட்டுள்ளன,” என்கிறார் அவர். ஒரிசா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களைக் கையாள அதன் போராட்டக்காரர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது பொதுவான நடைமுறையாக மாறிவிட்டது. இங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலிங்கா நகரில் ரபி ஜாரிகா உள்ளார். அவர் டாடா எஃகு ஆலைக்கான நில கையகப்படுத்தலை எதிர்த்த பழங்குடியினத் தலைவர். “சண்டியா என்ற என் கிராமத்தை விட்டு நான் வெளியே சென்று பல வருடங்கள் ஆகின்றன. இருக்கும் எல்லாப் பிரிவுகளின் கீழும் சேர்த்து என் மீது 72 வழக்குகளைக் காவல்துறை பதிவுசெய்துள்ளது.”
ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான எஸ்.தேவ்தத் சிங் பிபிஎஸ்எஸ் சொல்லும் எண்ணிக்கை “முற்றிலும் தவறானது. ஆனால் 200-300 பேர் மீது வழக்குகள் இருக்கலாம். பிபிஎஸ்எஸ் அமைப்பினரால் தொந்தரவு செய்யப்பட்டவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 52 குடும்பங்கள் உட்பட அவர்களால் வலுக்கட்டாயமாக பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் வெளியே வந்தால் கைது செய்யப்படுவோம் என்று சில அப்பாவிகள் பயந்தால், அவர்கள் பிபிஎஸ்எஸ் அமைப்பினரால் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கக்கூடும்,” என்று டெல்லியில் இருந்து தொலைபேசி வாயிலாக எங்களிடம் அவர் கூறினார்.
2005 புரிந்துணர்வு ஒப்பந்தம்
தின்கியாவில் நிலவும் அமைதி குறித்து சாஹூ சொன்னது சரியாகவே உள்ளது. மழை காரணமாகவே நிலப் போராட்டம் நின்றுள்ளது. ஆனால், அரசியல் சூழல் அசாதாரணமாகவே உள்ளது. திட்டம் வரவுள்ள இடத்தில் “குழந்தைகள் கல்விக்காக உள்ள இடத்தில் இருக்கும் காவல் படையின் கூடாரங்களைத் திரும்பப் பெறும்படி” மாநில அரசிடம் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளதுதான் தற்போதைய நிலவரம். திட்டத்திற்காக வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதி ஆகி ஓராண்டுக்கும் மேலாவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 2005ம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி போஸ்கோவிற்கு மாநிலமும் மாநகராட்சியும் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் கனிமங்களை வழங்கின. “இன்னும் 15 நாட்களில் புதுப்பிக்கப்படும்,” என அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் கிடைக்கின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லை என்றபோதும் திட்டத்திற்காக 4,004 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை அரசு நிறுத்தவில்லை. அவற்றில் கிட்டத்தட்ட பாதி நிலம் தின்கியா மற்றும் கோவிந்தபூரில் உள்ளது.