அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சந்திப்பை அடைந்தோம். “விவசாயிகளும் தொழிலாளர்களும் சிரமத்தில் இருக்கின்றனர்,” என்னும் அவர், “சாம, தான, பேத, தண்டம் என நான்கு பக்கங்களிலிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்,” என்கிறார். ஆட்சிக்கான நான்கு பாணிகளாக, அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியன் குறிப்பிடும் பொறுமை, பணம் முதலியவற்றை கொடுக்கும் தானம், தண்டனை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றைதான் கிருஷண் குறிப்பிடுகிறார்.
ஆனால் கிருஷண் குறிப்பிடும் சாணக்கியர், தற்போதும் இருப்பவர்!
”ஆளும் பாஜக, தில்லி எல்லையில் இறந்த 700 விவசாயிகளுக்கு பொறுப்பேற்கவில்லை,” என அவர் 2020-ல் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயப் போராட்டங்களை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு கண்டனம் தெரிவிக்கிறார் அவர்.
“லக்கிம்பூர் கெரியில் டெனி (பாஜக தலைவரின் மகன்), விவசாயிகளின் மீது வாகனம் ஏற்றியது நினைவில் இருக்கிறதா? கொலைபுரிவதில் அவர்கள் கஞ்சத்தனம் காட்டுவதில்லை.” உத்தரப்பிரதேசத்தில் 2021ம் ஆண்டு நடந்த சம்பவம் அவரின் மனதில் இருக்கிறது.
பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் ப்ரிஜ் பூஷன் சிங் விஷயத்திலும் அவரை போன்ற பலருக்கும் பாஜக நடந்துகொண்ட விதத்தில் அதிருப்தி இருக்கிறது. “கடந்த வருடத்தில் சாஷி மாலிக் போன்ற பல முன்னணி மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். மைனர் உள்ளிட்ட பல பெண்களுக்கு பாலியல்ரீதியாக அச்சுறுத்தல் ஏற்படுத்திய ப்ரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரினர்,” என்கிறார் அவர்.
2014ம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைப்பதாக பாஜக வாக்குறுதி கொடுத்தது. “அந்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?” எனக் கேட்கிறார் கிருஷண். “ஸ்விட்சர்லாந்திலிருந்து கறுப்பு பணம் கொண்டு வந்து, எங்கள் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னார்கள். இறுதியில் ரேஷன் பொருட்களும் பட்டினியும் மட்டும்தான் கிடைத்தது.”