ஜூனு, பனை ஓலைகளை ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஆட்டின் உணவில்லை என்றாலும், அவ்வப்போது அதற்கு ஒரு சுவையான விருந்தாக அமைகிறது.
ஆனால், நீண்ட இலைகளை வைத்து தொப்பியை வடிவமைக்கும் கல்யாணி பத்ராவுக்கு, இந்த விஷயம் கொஞ்சம் கவலையளிக்கிறது. அனுபவம் மிக்க கைவினைஞரான அவர், தன் ஆடு ஜூனுவின் தலையில் லேசாகத் தட்டி, தொப்பிகளை தயாரிக்கப் பயன்படும் இந்த அரிதான இலைகளை சாப்பிடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.
ஏதுவான இந்த பனைமர பனை [போராசஸ் ஃபிளாபெல்லிஃபர்] சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட உயரமான மரம். “பனை ஓலையைப் பெறுவது தான் பெரிய சவால். வங்காளத்தின் மிக உயரமான மரங்களில் ஒன்றான இது இங்கு நிறையவே உள்ளது. ஆனால் அதில் ஏறும் திறமைசாலிகள் தான் இல்லை,” என்கிறார் 50 வயதான கல்யாணி.
அனுபவமுள்ள கைவினைஞரும், அவரின் அண்டை வீட்டுக்காரருமான சாயா பிரமாணிக்கும் இதை ஒப்புக்கொள்கிறார், "முன்பு, வீட்டு ஆண்கள் இலைகளை எடுத்து வருவார்கள். ஆனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கு பனை மரத்தில் ஏறத் தெரியவில்லை." பிரமாணிக், யதார்த்த மற்றும் நடைமுறை விஷயத்தை கணக்கில் கொண்டு: "இப்போதெல்லாம் மரத்தில் ஏற யாருக்கு நேரம் இருக்கிறது?" என்கிறார்.
அக்குடி டோம் சமூகத்தைச் சார்ந்த கல்யாணி மற்றும் சாயா ஆகியோர், பல தலைமுறைகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். "எங்கள் இடம் பனை ஓலைகளுக்கும், மூங்கில் வேலைகளுக்கு பெயர் பெற்றது," என்று கைகளால் தொடர்ந்து பின்னியவாறே கல்யாணி கூறுகிறார். "முன்பு எங்கள் சமூகத்தில் திருமணங்கள் நடக்கும்போது, மூங்கிலைப் பின்னும் நிபுணத்துவம் பெற்றிருப்பது ஒரு ஆண், பெண் இருவருக்கும் வலுவான நற்பண்பாகக் கருதப்பட்டது." ஆனால் தற்போது பெரும்பாலும் டோம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் (மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதியில் வருகின்றனர்) மட்டுமே இந்த கைவினையைப் பயிற்சி செய்கின்றனர் என்று அவர் மேலும் கூறுகிறார். அவர்கள் பனை ஓலைகள் மற்றும் மூங்கிலில் இருந்து தொப்பிகள், கை விசிறிகள் மற்றும் பிற பொருட்களை உருவாக்குகிறார்கள்.


























