ஊர்த் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பெரும்பாலான ஊர்க்காரர்களுக்கு அவர்தான் ஊர்த்தலைவர் என்பது தெரியவில்லை. ஊரின் முக்கிய பொறுப்பில் அவரை உட்கார வைத்த பிறகு, பஞ்சாயத்து அவரை பொருட்படுத்தவில்லை.
“யாரும் என்னை பஞ்சாயத்துக்கு கூப்பிடுவதில்லை. யாரும் எதுவும் சொல்வதில்லை. நானும் செல்வதில்லை,” என்கிறார் மண் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் குமானியா. அவரை பேச சொல்லும்போது பதட்டப்படுகிறார். அவரின் 65 வயது கணவர் நத்து பிரதான் அவருக்கு பதிலாக பதில் சொல்ல முயலுகிறார். ஆனால் அவருக்கும் பஞ்சாயத்து விவகாரங்களை பற்றி குறைவாகதான் தெரியும்.
“ஊர்த்தலைவர் அவர்தான் (கணவர்) என அனைவரும் நினைக்கின்றனர்,” என்கிறார் அவர் கணவர் நதுவை குறிப்பிட்டு.
உள்ளூர் நிர்வாகத்தில் பட்டியல் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன (எழுபத்து மூன்றாம் சட்டத்திருத்தம்) முறையை அமலாக்கவென நடத்தப்பட்டதுதான் குமானியா தேர்ந்தெடுக்கப்பட்ட ‘தேர்தல்’. சட்டத்திருத்தத்தின்படி ஊரின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தனித்தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பட்டியல் சாதி மற்றும் பழங்குடி பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
2022ம் ஆண்டில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 455 பெண் ஊர்த்தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 64 சதவிகிதம் தலித் மற்றும் பட்டியல் பழங்குடி பெண்கள்.
அந்த வருடத்தில் மத்தியப் பிரதேச சிவபுரி மாவட்டத்தில் ஊர்த் தலைவர் பதவி, பட்டியல் பழங்குடிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், சஹாரியா பழங்குடியான குமானியா தேர்ந்தெடுக்கப்பட்டார். கஃபார் கிராமத்தின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு சஹாரியா இருப்பார். மொத்தமாக 1,935 சஹாரியா பழங்குடியினர் (கணக்கெடுப்பு 2011) அந்த கிராமத்தில் வாழ்கின்றனர்.
அவருடைய தேர்வில் நடந்திருக்கும் மோசடி தெரியுமென கூறும் அத்தம்பதியினர், ஆதிக்க சாதியினரை எதிர்த்து பேச அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர். “எங்களை போன்ற ஒடுக்கப்பட்டவர்களை பற்றி யார் கேட்பார்?” எனக் கேட்கிறார் அவர்.