வயல்களில் ஆண்டிற்கான நெற்பயிர்கள் தயாராகின்றன. அக்டோபர் இறுதியில் வயல்களில் விளைந்தவற்றை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வருகின்றனர். மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டம், பர்கிதி கிராமத்தின் ஏழ்மையான சண்டால் பழங்குடியினரின் வீடுகளில் நீண்ட காலத்திற்குப் பிறகு கூடுதலான தானியங்கள் குவிந்துள்ளன.
பர்கிதியில் இளைஞர்கள், பெற்றோர், தாத்தா பாட்டிகள் என சுமார் 400 பேருக்கு குறுகிய கடுமையான பருவகால வயல் வேலைகளுக்குப் பிறகு இப்போது ஓய்வெடுக்க கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. குளிர்காலம் நெருங்குகிறது. சோட்டா நாக்பூர் பீட பூமியின் கஜபுரு குன்றுகளின் வனங்களில் உள்ள மரங்களின் வண்ணங்கள் மாறி வருகின்றன. வடக்கிலிருந்து வீசும் குளிர் காற்றினால் சுட்டெரித்த வெயில் குறைந்து வருகிறது.














