செய்தியாளர் குறித்துக் கொண்டிருக்கும் டைரியை லஜோ தேவி ஆர்வத்துடன் பார்க்கிறார். சில நிமிடங்களில் அவருடைய ஆர்வம் பயமாக மாறுகிறது.
“இதையெல்லாம் காவல் நிலையத்தில் கொடுக்கப் போகிறீர்களா?” என மகாஹி மொழியில் கேட்கிறார். பிகாரின் மகதா பகுதியில் பேசப்படும் மொழி அது. இலுப்பை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இலுப்பை மது குறித்து அவர் பேசுகிறார். அதுதான் அவருடைய ஒரே வருமானம். அதைக் கொண்டுதான் அவர் பிழைக்கிறார்.
ஒப்புக்கொள்ள தொடக்கத்தில் தயங்கினாலும் வீட்டு மூலையில் கொதித்துக் கொண்டிருந்த எட்டு கிலோ வெல்லம் உண்மையை சொல்லும் கட்டாயத்தை அவருக்கு உருவாக்கியது. செய்தியாளரின் பார்வை அங்கு சென்றதும், அவர் உடனே கறுப்பு பாலிதீன் பாய்களை அவற்றின் மீது போர்த்துகிறார். “ஹோலிக்கு விற்கத்தான் இவற்றை நான் செய்கிறேன்,” என விளக்குகிறார் அவர் அவசரவசரமாக.
மது தயாரிப்பதில் லஜோ தேவிக்கு இருக்கும் அச்சத்துக்கும் கவலைக்கும் காரணம் இருக்கிறது. பிகார் மது விலக்கு ஆயத்தீர்வை சட்டப்படி, மதுவை தயாரிப்பதும் கொண்டிருப்பதும் விநியோகிப்பதும் அருந்துவதும், இலுப்பை உள்ளிட்ட உள்ளடக்கத்துடன் மதுவை தயாரிப்பதும் குற்றம். 1-10 லட்சம் ரூபாய் அபராதமும் ஆயுள்தண்டனை வரையும் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றம்.






