”என் 12ம் வகுப்பு அரசுப் பள்ளித் தேர்வை முடித்தேன். இளங்கலை கல்வி முடிவுகள் ஜூன் மாதத்தில் வரவிருந்தன. அடுத்து என்ன எனத் தெரியாமல் இருந்தேன். சீனியர் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற விருப்பம் இருந்தது,” எனிறார் சங்கேத் லோகண்டே. 2021ம் ஆண்டில் 18 வயதில் இருக்கும் போது இந்த நிலையில் இருந்தார் அவர். இப்போது பேசும்போது பெருமூச்சு விடுகிறார். அதுவே அவருக்கு சோர்வு அளிக்கிறது. முற்றத்தில் உள்ள கட்டிலில் தோள்கள் முழங்காலில் தாங்கியபடி அமரும் விதமே அவருடைய பலவீனத்தை காட்டுகிறது. இந்த வாரத்துக்கான டயாலிசிஸ் முடிந்த நான்கு நாட்கள் ஆகியிருக்கின்றன.
“பள்ளித் தேர்வு தொடங்கிய சில வாரங்களில் மூச்சுத் திணறல் தொடங்கியது. சில அடிகள் நடந்தாலும் முழுச்சோர்வுக்கு ஆளாவேன்,” என்கிறார் அவர். நல்ல சிகிச்சை அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊரிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகில்யாநகரின் (முன்பு அகமது நகர்) தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அவரை கொண்டு சென்றனர். சங்கேத்தின் தேர்வு முடிவுகள் வெளியானபோது, சிறுநீரகம் செயலிழந்து வீட்டில் இருக்கும் நிலையில் அவர் இருந்தார்.
“நாம் குடிக்கும் நீர் காரணமாக இருக்கலாம் என்றனர் மருத்துவர்கள். நாங்கள் நீர் குடிக்கும் ஏரி மாசுபட்டிருக்கலாம். எங்களின் மகன் நோயுறும் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை,” என்கிறார் சங்கேத்தின் தாயான 47 வயது மனிஷா.
அவர் பசார் தலவை குறிப்பிடுகிறார். அது, இயற்கையாக வடியும் நீர்ப்பாதைக்கு குறுக்காக நீர் எடுக்கவென அரை நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட செயற்கையான கசிவு தேக்கம் ஆகும். ஊரிலுள்ள 330 குடும்பங்கள், தங்களின் வீட்டுத் தேவைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் இந்த ஏரியைத்தான் சார்ந்திருக்கின்றன. ஆனால் கடந்த 12-லிருந்து 15 வருடங்களாக புற்றுநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சம்பவங்கள் ஊரில் அதிகரித்து வந்திருக்கின்றன.
”பல காலமாக மாசு நீரை குடித்து வருவது சிறுநீரகங்களை பாதிக்கும் என மருத்துவர்கள் எங்களை எச்சரித்தனர். ஊரை சேர்ந்த பலரும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்கிறார் மனிஷா. ஒருமுறை சென்றதில் மட்டும் ஐந்து குடும்பங்களை நான் சந்தித்தேன். அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தனர்.






















