“இனி அவர்களின் வயல்களுக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை. எங்களுக்கான தானியங்களையும் தீவனத்தையும் நாங்களே விளைவித்துக் கொள்கிறோம். உங்களின் பார்வை எட்டும் வரை இருப்பது எங்களின் நிலம்தான்.” விரிந்த கைகளுடன் ரஜிந்தெர் கெளர், 125 ஏக்கர் நிலத்தை சுட்டிக் காட்டுகிறார். சுதந்திரம் பெற்று 67 வருடங்களுக்கு பிறகு ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருந்து அந்த கிராமத்தின் தலித்கள் மீட்டெடுத்த நிலங்கள் அவை.
ஆதிக்க சாதியினரின் வயல்களுக்குள் சென்றதால், அவமதிக்கப்பட்ட கதை ஒன்றையேனும் பலாத் கலன் கிராமத்தின் ஒவ்வொரு நிலமற்ற தலித் பெண்ணும் கொண்டிருக்கிறார். நினைவில் அந்த அவமதிப்புகள் இன்றும் இருந்தாலும், அவர்களின் காவியத்தன்மை பொருந்திய போராட்டம், அவற்றை கடந்த காலத்துக்கு தள்ளி விட்டிருக்கிறது.
பஞ்சாயத்து நிலங்களின் மூன்றில் ஒரு பங்கு மீதான உரிமையை மீட்டெடுக்க தலித் போராட்ட இயக்கம் கடுமையாக போராடியது. 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பஞ்சாப் கிராம பொது நிலங்கள் சட்டம் கொடுத்த உரிமை அது. 2014ம் ஆண்டு தொடங்கி நீண்ட அவர்களின் போராட்டங்களால் தெற்கு பஞ்சாபின் 162 கிராமங்களில் 20,000 பிகா (4,210 ஏக்கர்) நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது தலித்கள் தங்களின் போராட்டத்தில் இன்னொரு படி முன் நகர்ந்திருக்கின்றனர். 1972 நில உச்சவரம்பு சட்டத்தை தாண்டி ஆதிக்க சாதியினர் வைத்திருக்கும் நிலங்களில் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்துகின்றனர்.
சங்ரூர் மற்றும் பாடியாலாவுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலை 7-ல் உள்ள பலாத் கலன் கிராமத்தில்தான், போராட்ட இயக்கம் முக்கியமான கட்டத்தை அடைந்தது. ரஜிந்தெர் கெளர் போன்ற பெண்கள், தங்களின் கூட்டு போராட்ட இயக்கம் சாதித்த அற்புதங்களை விவரிக்கும் வாய்ப்பை பெற்றது இப்பகுதியில்தான். நீதிக்கான போராட்டம் பலாத் கலன் கிராமத்துக்கு புதிதில்லை. நீதி நிறைந்த உலகத்துக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கான நினைவகங்கள் அந்த கிராமத்தின் போராட்ட மரபுக்கு சாட்சிகளாக அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன.













