“சில வருடங்களுக்கு முன், குளம் அமைப்பது போன்ற எங்களின் பிரச்சினைகளை பஞ்சாயத்து கூட்டத்தில் கொண்டு வர விரும்பினால், ஊர்த்தலைவருடன் பேசுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது,” என்கிறார் கோதாவரி மராவி.
அத்தகைய நிலையிலிருந்து பெரிய அளவில் மாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும், பெண்களின் முயற்சிகள் அவற்றுக்கு பெரும் காரணம். அந்த பெண்களைதான் ஜூலை 2024-ன் ஒரு மழைநாளில் மத்தியப்பிரதேச பர்காகவோனில் சந்தித்தோம்.
பெண்கள் மட்டுமே இருக்கும் ஹல்சலித் மகளிர் விவசாய பெண்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்களும் கோதாவரியும் காலையில் வந்தார்கள். திண்டோரி மாவட்டத்தின் சம்னாபூர் ஒன்றியத்தில் தகரக்கூரை மற்றும் சுவர்கள் கொண்ட பெரும் கிடங்கு போன்ற இடத்தில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாற்காலி, மேஜை, கணிணி மற்றும் சில அலமாரிகளும் குளர்சாதனமும் வாசலின் ஒரு பக்கத்தில் சிறு அலுவலகத்துக்கான தோற்றத்தை கொடுத்தது.
உற்பத்தி நிறுவனத்தின் பெயர், தங்களை விவசாயிகளாக அடையாளப்படுத்த விரும்பும் பெண்களின் பெருமையுணர்வில் இருந்து உருவானது. ஏரோட்டி பணி செய்வது ஆணின் வேலையாக கருதப்பட்ட நிலையில், அந்த கருத்தை எதிர்க்கும் வகையில் ஏரோட்டி என பொருள்படும் ஹல்சலித் பெயரை நிறுவனத்திற்கு சூட்டியிருக்கின்றனர். இன்றைய நிலையில் 1,400 பதிவு செய்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
இரு உறுப்பினர்களான 44 வயது கோதாவரி மராவி மற்றும் 47 வயது தேவகி வாக்ளே ஆகியோர் பர்கா கிராமம் என அழைக்கப்படும் பர்காகாவோனில் வசிக்கின்றனர். அலுவலகத்துக்கு நடந்து வந்திருக்கின்றனர். பிற பெண்கள் சம்னாபூர் ஒன்றியத்திலிருந்து ரிஷாக்களிலும் குடும்ப உறுப்பினர்களின் பைக்குகளில் உள்ள பின் சீட்டுகளில் அமர்ந்தும் வந்திருக்கின்றனர்.
கோதாவரி மராவிதான் தற்போதைய தலைவர். பாரம்பரியமாக இங்குள்ள விவசாயிகள் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இருந்ததை குறித்து சொல்லும் அவர், அந்த நிலை மெல்ல 2010ம் ஆண்டிலிருந்து மாறி, ரசாயனத்தை பயன்படுத்துவதே யதார்த்தம் என்கிற நிலைக்கு வந்து விட்டது. எனினும் திண்டோரி மாவட்டத்தின் பல விவசாயிகள் 2022ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயத்துக்கும் கலப்பு விவசாயத்துக்கும் மாறினர். ரசாயனமற்ற விவசாயத்தை ஊக்குவிக்கும் பல அமைப்புகளால் அவர்கள் ஆதரவு பெற்றனர்.
"நாங்கள் விவசாயிகளுக்கு இயற்கை விதைகளை வழங்குகிறோம். புல், களைகள் மற்றும் ஹார்பத்வார் (வைக்கோல்) ஆகியவற்றுடன் வயலை உழும்போது, இவை மண்ணில் புதைகின்றன. முதல் இயற்கை உரமாக மாறுகின்றன," என்று கோதாவரி கூறுகிறார்.


