“வேண்டா”, என்றார் அவர், பெயரை கேட்டதற்கு. சில கணங்கள் குழப்பம். பிறகுதான் புரிந்தது அவர் வேண்டாம் என சொல்லவில்லை, அவரின் பெயரே அதுதான் என. ‘வேண்டாம்’ என்கிற வார்த்தையைதான் ‘வேண்டா’ என அவருக்கு பெயராக சூட்டியிருக்கின்றனர்.
நரசிம்மன் மற்றும் காலஞ்சென்ற ராஜம்மாள் ஆகியோரின் 39 வயது மகள்தான் என்.வேண்டாம். மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் என தொடர்ந்து கர்ப்பம் தரித்துக் கொண்டிருந்த தாய்க்கு ஐந்தாவது மகளாக பிறந்தவர்தான் அவர். மேலும் குழந்தைகள் வேண்டாம் என கடவுளை கோரும் வகையில் பெற்றோர் அவருக்கு ‘வேண்டா’ என பெயர் வைத்திருக்கின்றனர். ஆதார் அட்டையில் அவரின் பெயர் ‘வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உயிருடன் இருந்த சில வருடங்களுக்கு முன்பு உரையாடியபோது, ஒருவேளை மகனாக அவர் பிறந்திருந்தால், ‘வேண்டா’ என பெயர் சூட்டப்பட்டிருக்காது என்றார். ஆனால் அவர்களுக்கு மகள் பிறந்தார். எதிர்காலம், பிறப்பு சான்றிதழிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
காலஞ்சென்ற ராஜம்மாள் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்: “ஒருவேளை நாங்கள் மங்களகரமான ஒரு பெயரை சூட்டியிருந்தால், இந்த வாழ்வு உனக்கு நன்றாக இருந்திருக்கும் போல,” என கூறியிருக்கிறார் அவர் மகளிடம்.
திருவள்ளூர் மத்தூரில் வசிக்கும் வேண்டா, குறைந்தபட்சம் 10 பேருக்கு தன் ஊரில் வேண்டா என பெயரிடப்பட்டிருப்பதாக சொல்கிறார். “திருத்தணி ஒன்றியத்தை சுற்றியிருக்கும் ஊர்களிலும் எங்கள் சமூகத்திலும் இந்தப் பெயர் வழக்கமான பெயர்தான்,” என்கிறார் அவர்.





