மரத்வாடாவின் உஸ்மனாபாத் மாவட்டத்தில் தக்விகி கிராமத்தில், குடங்கள் இடித்து எழுப்பும் சத்தம் விடியலை அறிவிக்கிறது. அருகிலே தண்ணீர் கிடைக்கும் இடம் நோக்கி மக்கள் செல்கின்றனர். அடுத்து, தண்ணீருக்காக அலைகிறவர்கள் குறுகிய சந்துகளில் தங்களின் பாத்திரங்களுடன் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் 60 வயது தொடங்கி ஐந்து வயது வரை பலதரப்பட்டோர் நிற்கின்றனர்.
14 வயது பிரித்விராஜ் ஷிர்சத்தும் 13 வயது ஆதேஷ் ஷிர்சத்தும் வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் வீட்டுக்கு எதிரில் வாழும் ஆசிரியர் ஒருவர், வாரத்தில் ஓரிரு முறை தனது ஆழ்துளைக் கிணற்றில் கிராமத்தினரைத் தண்ணீர் எடுக்க விடுகிறார். கோடை விடுமுறைகளின் காலம். பள்ளிக்கூடம் இருக்கிறது என்ற சாக்குச் சொல்லி, காலையில் தண்ணீர் கொண்டுவரும் வேலையைத் தவிர்க்க, ஷிர்சத் சகோதரர்களால் முடியாது. ”அருகிலிருக்கும் ஆசிரியரின் வீட்டிலிருந்து நீர் கிடைக்கவில்லையென்றால், ஒரு கிலோமீட்டர் போக வேண்டியிருக்கும்” என்கிறார். அவருடைய தம்பி இரண்டு மணிநேரத்தில் 10 குடங்களை நிரப்புவதாகவும், தான் ஒன்றரை மணி நேரத்தில் 15 குடங்களை நிரப்புவதாகவும் கிண்டலடிக்கிறார் பிரித்விராஜ். “நீ என்னைச் சைக்கிளை எடுக்க விடுவதே இல்லை” என்று ஆதேஷ் புன்னகையுடன் பதிலடி கொடுக்கிறார்.
கொஞ்ச தூரத்தில் 40 வயது சாயா சூர்யவம்சி, கொளுத்தும் வெயிலில் நிலத்தில் நடந்து போவதைப் பற்றி குறைந்த எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறார். அவருக்கு மிக அருகில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு, வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தண்ணீர் நிரப்புவது அவருடைய வேலை. அவரது கணவர் சொந்த நிலத்தில் வேலை செய்கிறார். “ஆறுபேர் உள்ள என் குடும்பத்தினருக்கு 15 குடம் தண்ணீர் தேவை,” என்று அவர் சொல்லும் போது தலையில் ஒரு குடம் இருக்கிறது. அதை வலது கையால் பிடித்திருக்கிறார். இன்னொரு குடம் இடது கைக்குக் கீழ், இடுப்பில் நிற்கிறது. “ஒரே நேரத்தில் இரண்டு குடங்களை என்னால் சுமக்க முடியும். அப்படியும் 7-8 முறை அலைய வேண்டும். ஒரு தடவை சென்றுவர சுமார் 30 நிமிடங்கள் ஆகிறது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பரவாயில்லை [ஏனென்றால் 2016-ல் மழை நன்றாகப் பெய்தது].”

