“விளக்குமாறு செய்வது ஏழு கட்டங்களை கொண்டது,” என்கிறார் பக்வதி.
20 வயதே ஆனாலும் தாயிடமும் குடும்பத்தின் பிறரிடமிருந்தும் கலையை தெளிவாக கற்று வைத்திருக்கிறார் பக்வதி. “முதலில் நாங்கள் ஈச்ச மர ஓலைகளை பாதியாக உடைத்து, ஓலையை பிரித்து எடுத்து விடுவோம்,” என்கிறார் அவர்.
“சிறு சிறு துண்டுகள்” என அவர் ஓலைகளை குறிப்பிடுகிறார். சிறு இலைகள் சேர்ந்து ஒரு பெரிய இறகு போன்ற இலையை உருவாக்கியிருக்கும். விளக்குமாறு செய்பவர்கள், ஒவ்வொன்றையும் வெட்டி, பிறகு கட்டுகளாக சேர்த்து கட்டுவார்கள். பிறகு அவை ஒரு மூங்கில் குச்சியுடன் கட்டப்பட்டு இறுக்கமாக பாலிதீனில் கட்டப்பட்டிருக்கிறது. கடைசி கட்டமாக ஓலைகள் மெலிதாக்கப்பட்டு, முனைகள் வெட்டப்படும் என்கிறார் அவர் எல்லா கட்டங்களையும் விவரித்து. அவரின் சகோதரரின் குழந்தையான தியோவாலி அவ்வப்போது சத்தம் கொடுக்கிறார்.
இருபது வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் உறவினர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மனப்பாடமாக செய்கிறார்கள். பஞ்சாபின் மலூத்தின் நடைபாதையில் பக்வதியின் தாய் சோனி தேவியுடன் அமர்ந்திருக்கும் அந்த பெண்கள் வட்டமாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஒத்திகை பார்க்கப்பட்ட நடனம் போல, தனக்கான தருணம் வருகையில், கச்சிதமாக வேலையைப் பார்த்து அடுத்த வேலை செய்ய அடுத்தவருக்கு கொடுக்கிறார்கள்.
குடும்பத் தொழில் பற்றிய தியோவாலியின் உற்சாகம் அவரது குரலில் தெரிகிறது: “குழந்தையில் இருந்தே விளக்குமாறு தயாரிப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறோம். இப்போதும் அந்த ஆர்வம் இருக்கிறது.” தாய் ருக்மணியிடம் இருந்து கலையைக் கற்றுக் கொண்ட அவர், மூன்று இளம் சகோதரிகளுக்கு அதைக் கடத்த விரும்புகிறார்.
அவரின் உறவினரான பக்வதியும் அதே அளவு உற்சாகத்துடன் இருக்கிறார். ஆனாலும் நடைமுறை யதார்த்தம் தெரிந்து பேசுகிறார். “நாங்கள் சாப்பிட வேண்டுமெனில் கடுமையாக உழைக்க வேண்டும். வேலையின்றி நாங்கள் எப்படி சாப்பிடுவது?” எனக் கேட்கிறார் அவர். அவர் வளரும்போது, “விளக்குமாறுகளை நாம் செய்யவில்லை எனில் எப்படி சாப்பிடுவது?” என சோனி தேவியின் கேள்வியைக் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறார். ராஜஸ்தானின் மெவார் பகுதியிலிருந்து விளக்குமாறு தயாரிக்க பஞ்சாபுக்கு செல்லும் பிறருக்கும் இதே உணர்வுதான் இருக்கிறது.





















