கில்லாபந்தரின் நுழைவாயிலுக்கு அருகே உள்ள கிணற்றருகே காலை 11 மணிக்குச் சுமார் 20 சிறுமிகளும் பெண்களும் கூடியிருந்தனர். “[வெயில் காலத்தில்] கிணற்றின் ஒரு மூலையில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். ஒரு (பாத்திர) குடத்தை நிரப்ப எங்களுக்கு அரை மணிநேரம் ஆகிறது,” என்கிறார் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நீலம் மன்பாத். கில்லாபந்தர் மும்பை நகரின் வடக்கில் இருக்கும் வசாய் கோட்டையின் எல்லையில் உள்ள மீனவர் கிராமம் ஆகும்.
அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளில் தினமும் பல மணிநேரம் செலவிட்டு தண்ணீர் எடுக்கின்றனர். அந்த சிறுமிகளில் சிலருக்கு வெறும் நான்கு வயதே இருக்கும். பொது இடத்தில் இருக்கும் அந்தக் கிணறு மட்டுமே அந்தக் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள ஒரே குடிநீர் ஆதாரமாகும். அங்குள்ள நகராட்சியின் குடிநீர் விநியோகம் என்பது நம்பகத்தன்மையற்றதாகவும், போதாமையாக இருப்பதாகவும் அந்தப் பெண்கள் கூறுகின்றனர். அதிகப்படியான குடும்பங்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சார்ந்து இருப்பதால் அதன் தண்ணீர் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக வெயில் காலத்தில் அப்படி நடக்கிறது. அந்தப் பெண்கள் கிணற்றின் அடிப்பகுதியைச் சுரண்டியே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
பல்கார் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகா சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அந்த நகரின் மக்கள் தொகை (2011 கணக்குபடி) சுமார் 13 லட்சமாகும். வசாய் நகரின் உள்ளாட்சி அமைப்பானது அப்பகுதியில் உள்ள சுமார் இரண்டு நகரங்களுக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கும் போதிய நீரை வழங்க வேண்டும். ஆனால் வழங்குவதில்லை.
தங்கள் கிராமத்தில் இன்னும் கிணறுகளையும் லாரி தண்ணீரையும் தாங்கள் சார்ந்திருக்கும் சூழலில் பல்கார் மாவட்டத்தில் இருந்து மும்பை பெருநகரப் பகுதிக்கு நீர் செல்வதாக கில்லாபந்தர் மக்கள் கோபமடைகின்றனர். தன் அருகில் இருந்த பெண்ணிடம் என்னைக் காட்டி “இவர் இதைச் செய்ய வேண்டியதில்லை,” என்கிறார் பிரியா கட்யா. பிறகு என்னைப் பார்த்து, “[துணி துவைக்க] உங்களிடம் இயந்திரம் இருக்கும். நீங்கள் இதைச் செய்ய வேண்டியதில்லை. எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் உங்களுக்குக் கிடைக்கிறது,” என்கிறார்.
வசாய் கோட்டைப் பகுதியில் 75க்கும் அதிகமான கிணறுகள் உள்ளன. “அவற்றில் பெரும்பாலானவைச் பயன்பாட்டில் இல்லை. வெறும் 5 முதல் 6 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன,” என்கிறார் அந்தக் கோட்டைக்கான இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்புப் பணியாளர் கைலாஸ் ஷிண்டே.







