வயநாட்டில் பனி படர்ந்த பசிய பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளிலிருந்து ஓடி வரும் ஓடைகள் ஆகியவற்றுக்கு இடையில் காலத்தை தாண்டி ஒரு மண் வீடு திடமாக நின்று கொண்டிருக்கிறது. அதன் மண் சுவர்கள் கோடையில் குளிர் காற்றை சுவாசிக்கிறது மூங்கில் கைம்மரங்கள் மெதுவாக அசைந்து கொண்டிருக்கிறது. கனமான செம்மரத்திலான உத்தரம் 150 மழைக்காலங்களின் எடையை சுமந்திருக்கிறது. செம்மண்ணால் பூசப்பட்ட தரை, வாரந்தோறும் மாட்டுச்சாணம் கொண்டு மெழுகப்படுகிறது.
கேரளாவின் மனந்தாவடி டவுனுக்கு அருகே இருக்கும் கம்மானா கிராமத்திலுள்ள இந்த வீட்டில், நெல் விதைகள் தம் கதைகளை சொல்கின்றன.
அவற்றின் பாதுகாவலரான செருவயல் ராமன் குரிச்சியா சமூகத்தை (பட்டியல் பழங்குடி) சேர்ந்தவர். ஒருகாலத்தில் அவரின் சமூகம், மலபார் பகுதியில், தங்களின் நெல் விவசாயத்துக்கான புகழ் பெற்றிருந்தது. 73 வயதாகும் அவர், பொருளாதாரம் நசிந்தாலும் ஆரோக்கியம் குறைபட்டாலும் அரசு மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவு இல்லையென்றாலும் தளராமல், பல பத்தாண்டுகளாக பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வருகிறார்.
“அவைதான் (விதைகள்) வாழும் முன்னோர்கள்,” என்கிறார் ராமன். கேரளாவின் விவசாய ஆன்மாவின் பாதுகாவலராக கொண்டாடப்படுபவர் அவர். ஒருகாலத்தில் வீட்டில் சேமிக்கப்பட்டிருக்கும் அரிசி வகைகளை வைத்து செல்வம் கேரளாவில் மதிப்படப்பட்டது.
தன்னுடைய முன்னோரின் வீட்டை பன்மைத்துவம் வாழும் அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார் ராமன். அவரின் களஞ்சியத்தில் வயநாட்டை சேர்ந்த 50 பாரம்பரிய வகைகள் மற்றும் கேரளாவின் பிற இடங்களில் சேகரித்த 14 வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு பருவத்திலும் அவற்றை அவர் வளர்த்து, விதைகளை சேமிக்கிறார். பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் பழங்குடி விவசாயிகள், தனி விவசாயிகள், ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு விதைகளை அவர் இலவசமாக கொடுக்கிறார். “ஒவ்வொரு அரிசிக்கும் ஓர் ஆன்மா இருக்கிறது,” என்கிறார் அவர். “அது மண்ணை, மழையை, ஸ்பரிசத்தை பல தலைமுறைகளுக்கு நினைவில் வைத்திருக்கும். அவற்றை இழந்தால், நம் வரலாறையும் நாம் இழப்போம்,” என்கிறார் அவர்.
முன்னறையின் மங்கிய வெளிச்சத்தில் அரிய அரிசி வகைகளின் கரடு முரடான சாக்குகள், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு வரலாறின் காவலர்களாக வீற்றிருக்கின்றன. ஒவ்வொரு பையும் மலையாளத்தில் தாலாட்டுகளை தொனிக்கும் பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கின்றன: செந்நெல்லு, தொண்டி, செம்பகம், வெலியன், கந்தாகசலா, கயமா.
மல்லிகை மற்றும் சந்தன மரத்தை ஒத்த நறுமணம், கந்தகசாலாவை வேக வைக்கும்போது வரும் விதத்தை ராமன் விவரிக்கிறார்; ஜீரகசாலா என அழைக்கப்படும் கயாமா, மலபார் பிரியாணியை நினைவூட்டும் வகையில் வெண்ணெய் மணத்தை காற்றில் நிரப்பும். செம்பகம் இனிமையான ருசியான சுவை கொண்டிருக்கும். தேங்காய் பாலுடன் கலக்கப்பட்டு பாயாசமாக வழங்கப்படும்.










