தசரத் முசாஹர் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு அடி குழாய் உள்ளது. அங்கு நாள் முழுவதும் குழாயடிக்கும் சத்தம் கேட்கும். பெண்கள் குளித்துவிட்டு துணிகளை துவைக்கும் காட்சிகளையும் காண முடியும்.
மாநில அரசால் வோர்னார் கிராமத்தில் நிறுவப்பட்ட இந்த அடிகுழாய், தஷரத் குடும்பத்திற்கு எட்டாக் கனியே. தலித் சாதியின் முசாஹர் பிரிவினருக்கு பாலாமு கிராம அடிகுழாய் அருகில் இருந்தாலும், அனுமதி கிடையாது.
“ஹமன் கி கரி தேவாலி, கஹலே, நா கி கஹி அவுர் சே பானியோ பரோ [அவர்கள் எங்களை அவதூறாக பேசுவதோடு, வேறு இடத்திற்கு சென்று நீர் எடுக்க சொல்கின்றனர்],” என்கிறார் தசரத் முசாஹர். நீர் எடுக்கும் பாத்திரங்களும் தூக்கி வீசப்படுவதாக அவர் சொல்கிறார்.
அடிகுழாயிற்கு அருகில் ராமவதார் சவுத்ரியின் வீடு உள்ளது. “அவர்கள் இடத்தை சுத்தமாக வைப்பதில்லை என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. யாராவது அங்கு தண்ணீரை குடிக்க முடியுமா?” என்று அவர் இங்கு வசிக்கும் 2,749 மக்களில் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வசிக்கும் முசாஹர் தலித்துகளுக்கு எதிரான வெளிப்படையான தீண்டாமையை செய்தியாளரிடம் வெளிப்படுத்துகிறார்.








