பசிய கோதுமை வயல்கள் தங்க நிறத்துக்கு மாறும்போது தல்பாரா சிங்கின் கவலைகளும் அதிகரிக்கிறது. விரைவில், அறுவடை காலம் வந்துவிடும். விரைவில் டீசல் எரிபொருளாக இருக்காது. வாழ்வாதாரமாகி விடும். பர்னாலா மாவட்ட பட்டி கிராமத்தின் நிலமற்ற தலித் விவசாயி, டீசல் குறைந்துவிடாமலிருக்க 18 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்.
55 வயது தல்பாரா சிங், மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். பிறரின் நிலங்களிலும் அறுவடை காலத்தில் கோதுமை வைக்கோலை பறிக்கும் வேலை செய்து தருகிறார். அவர் ட்ராக்ட்ரையும் ரீப்பரையும் காட்டுகிறார். “முழுமையாக இயங்கினால் டீசல் ட்ரம் இரண்டு நாட்களுக்குதான் தாக்குப்பிடிக்கும்.”
ஆனால் இத்தனை வட்டிக்கு பணம் வாங்கலாமா? “வேறு என்ன எங்களுக்கு வழி இருக்கிறது? ஒரு வாரம் கழித்து டீசல் கிடைக்காமல் போனால் நான் என்ன செய்வது? மொத்த பயிரும் நாசமாகிவிடும். குழந்தை போல் பயிர் வளர்த்திருக்கிறேன்,” என்கிறார் அவர். வருடம் முழுக்க வருமானம் இல்லாததால் தல்பாராவின் வருமானத்தை கணக்கிடுவது கடினமாக இருக்கிறது. அவரின் இழப்புகளும் கடன்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
பஞ்சாப் விவசாயிகளை பொறுத்தவரை, அமெரிக்கா-இஸ்ரேல் போர் என்பது கடன் மட்டும்தான். தல்பாரா சிங் போன்றவர்களுக்கு அது இன்னும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஏனெனில் அவர்களின் குழந்தைகள் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். போர் அவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது. கடந்த மாதத்தில்தான், சுற்றுலா மற்றும் கப்பல்துறையை சார்ந்திருக்கும் மேற்கு ஆசிய நாடான சைப்ரஸில் இருக்கும் மகனுக்கு அனுப்ப 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இரு துறைகளும் போரால் பாதிக்கப்பட்டிருக்கிறது. “ஆனால் வேலை கிடைக்காததால் என் மகனுக்கு மகிழ்ச்சி இல்லை. எனவே இப்போது அவன் திரும்பி வர விரும்புகிறான்,” என்கிறார் அவர். அறியாமையில் தல்பாரா தன்னுடைய விதியை நொந்து கொள்கிறார். எங்கள் உரையாடலில் ஒருமுறை கூட போரை பற்றி அவர் குறிப்பிடவில்லை.
கோதுமை அறுவடைக் காலம் நெருங்கும் நிலையில், போர்ச்சூழல் உருவாக்கியிருக்கும் நிச்சயமற்றத்தன்மையால், பல விவசாயிகள் இரு வாரங்களுக்கு முன்பிருந்தே டீசலை முன்னதாக வாங்கி வருகிறார்கள். காலி டீசல் ட்ரம்முடன் நிற்கும் ட்ராக்டர்களின் நீண்ட வரிசையை டீசல் நிரப்பும் மையங்களில் நீங்கள் காணலாம். ”பெரும் வட்டி அளவில் அவர்கள் கடன் வாங்குகின்றனர்,” என்கிறார் பாடியாலா மாவட்டத்தை சேர்ந்த பாரதிய கிசான் சங்க (தகாவுண்டா) தலைவர் ரக்பீர் சிங் தகாலா.




