அமைதியாக இருந்த ஹார்வான் பகுதி தெருவை உடையும் பெரும் சத்தம் நிறைக்கிறது. முகமது அஃப்சல் மற்றும் சஜித் கான் ஆகியோர் ஒரு வாதுமை கொட்டை மரத்தை (Juglans regia) அடித்துக் கொண்டிருக்கின்றன. கொட்டைகள் அடிபட்டு, பக்கத்து வீடுகளின் உலோகக் கூரைகளை அடிக்கும் பெரும் சத்தம்தான் அது.
நூறு அடி அல்லது 10 மாடி உயரத்தில் வாதுமை கொட்டைகளை அடிப்பது என்பது ஆபத்தான வேலை. எனவே வாதுமை கொட்டைகளை சேகரிப்பவர்கள், அதிக திறன் படைத்த தொழிலாளர்களாக இருப்பார்கள். சானன் வோல் என அழைக்கப்படுகிறார்கள். ஜம்முவின் ரஜோரியை சேர்ந்த முகமது அஃப்சல், ஆறு வருடங்களாக இந்த வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு பருவத்திலும், பகர்வால் சமூகத்தை (பட்டியல் பழங்குடி சமூகம்) சேர்ந்த 24 வயது இளைஞரான அவர் இந்த வேலைக்காக காஷ்மீருக்கு செல்கிறார். “மரங்கள் உயரமாக இருப்பதால் எனக்கு அச்சமாக இருக்கிறது,” என்கிறார். வாதுமை கொட்டை சேகரிப்புடன் சேர்த்து, ஆப்பிள் கட்டும் வேலையையும் மரம் வெட்டும் வேலையையும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் 400-700 ரூபாய் தினசரி ஊதியத்துக்கு செய்கிறார். இந்த காலக்கட்டத்தில் அஃப்சலும் வாதுமை அடிக்கும் பிறரும் தாம் வேலை பார்க்கும் பழத்தோட்டங்களுக்கு அருகே தற்காலிக குடிசைகள் போட்டு வசிக்கின்றனர்.
ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரையிலான அறுவடை காலத்தில், அஃப்சலின் வேலை நாள், காலை ஏழு மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு நிறைவடைகிறது. நாளொன்றுக்கு உயரம் சார்ந்து, நான்கைந்து மரங்களில் ஏறி, மேலே உள்ள கிளைகளை, நீண்ட தடிகளை கொண்டு அடிக்கும் வேலையை செய்கிறார்.
வாதுமை கொட்டை சேகரிக்கும் வேலையை சவாலான வேலையாக பார்க்கிறார் அஃப்சல். “ஆபத்து நிறைந்த வேலை இது,” என்கிறார் அவர். “நுட்பமாக நீங்கள் மரத்தில் நின்று, ஐந்து கிலோ எடை கொண்ட தடியுடன் வாதுமை கொட்டையை வேகமாக அடிக்க வேண்டும்.”
பட்காம் பகுதி வாதுமை கொட்டை மரங்கள் 150 அடி வரை வளரக் கூடியவை. “மழை நாட்களில், வழுக்கும் என்பதால் மரங்களில் ஏறுவதை நாங்கள் தவிர்ப்போம்,” என்கிறார் அஃப்சல். “அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் எனக்கு நேரவில்லை.”
ஆனால் அவரது குடும்பம், அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறது. “என் தாய், நான் இந்த வேலை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் ஊரில் பல ஆண்கள் வாதுமை கொட்டை மரங்களிலிருந்து விழுந்து இறந்து போயிருக்கிறார்கள்,” என்கிறார் அவர்.














