“குளிப்பதற்காக மட்டும்தான் நான் வீட்டுக்கு செல்வேன்,” என்கிறார் மிர்சா முகமது கான். த்ராக்பாலிலுள்ள டீக்கடைக்கு வெளியே அவர் அமர்ந்திருக்கிறார். ஸ்ரீநகரிலிருந்து குரேஸ் பள்ளத்தாக்குக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் அக்கடை இருக்கிறது. அதிக மக்கள்தொகை இல்லாத காஷ்மீரின் இந்த மூலையில், இக்கடையின் அதற்கான பதாகையும் தென்படாமல் இருக்க முடியாது.
“ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் 500 லிட்டர் தண்ணீர் பெறுகிறோம்,” என்கிறார் 32 வயது டீக்கடைக்காரர். “அதை வைத்துதான் நான் டீ போட வேண்டும். பாத்திரங்கள் கழுவ வேண்டும். பிற வேலைகளும் செய்ய வேண்டும். இங்கு குளித்து 20-30 லிட்டர் நீரை நான் வீணாக்க முடியாது. ஒவ்வொரு கோப்பை நீரும் முக்கியம்,” என்கிறார் அவர்.
த்ராக்பாலில் ராஜ்தான் மலைகளின் பின்னணியில் 12 வருடங்களாக மிர்சா நடத்தி வரும் கடையில் டீ, காபி, மேகி நூடுலஸ், பிற தின்பண்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும். “இது எனக்கு இரண்டாம் வீடு போல. புதன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கிட்டத்தட்ட வாரத்துக்கு ஐந்து நாட்கள் இங்கு நான் வசிக்கிறேன். திங்கட்கிழமை குறைவான மக்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் நான் வீட்டுக்கு செல்வேன்,” என்கிறார் மிர்சா. அவரது வீடு 30 கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்ட பெத்கூட் பகுதியில் இருக்கிறது. மிர்சா கடையிலேயே தூங்குவார். கடையில் ஒரு ஸ்டோர் ரூமும் 3 X 6 அடி படுக்கையறையும் இருக்கிறது.








