அரபிக் கடல் மீண்டும் மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பல்கர் மாவட்டம் தஹானு கழிமுகப் பகுதியின் அலைவடிவ மணல் திட்டுக்களையும், ஆழமற்ற நீரோடைகளையும் அது விழுங்கிக்கொண்டிருக்கிறது. அமிதா தண்டேல் இரவில் சரியாக தூங்குவதில்லை. அவர் எப்போதும் கடல் நீர் உயரும் நேரத்திற்காக காத்திருக்கிறார். அவ்வப்போது அலாரம் வைத்து விழித்துக்கொள்கிறார். பேட்டரி முகப்பு விளக்கை நெற்றியில் கட்டியபடி, தோளில் 10-15 கிலோ எடையுள்ள வலையைச் சுமந்தபடி, நள்ளிரவு நேரத்தில் கடலை நோக்கி நடக்கிறார். கழிமுகத்தின் 400 மீட்டர் தொலைவில் மற்றொரு பெண்மணி இவருக்காக காத்திருக்கிறார். “நிலவின் நகர்வை பல ஆண்டுகாலம் கவனித்து புரிந்துகொண்டோம். அது அலையின் ஏற்ற, இறக்கங்களை நமக்கு சொல்லும்,” என்கிறார் அவர்.
“எங்கள் சமூகத்தில் பிள்ளைகள், பெற்றோர் மீன்பிடிப்பதை பார்த்து வளர்கின்றனர். எனது15 வயதில் அப்பா என்னை கடலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அலைகளின் ஏற்ற இறக்கம், நிலவின் நகர்வு, கழிமுகத்தில் மீன்கள் எங்கு இருக்கும் போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார்.” 60 வயதிலும் அமிதா தனது தந்தையைப் போன்று ஐந்து தசாப்தங்களாக அலைகளை கவனித்து வருகிறார்.
கழிமுகத்தின் முனையில் மற்றொரு பெண்மணியுடன் சேர்ந்து 100x20 அடி நீளமுள்ள வலையை அவர் விரிக்கிறார். வலையை இருமுனையிலும் பிடித்தபடி அவர்கள் கடலுக்குள் நுழைகின்றனர். இருவரும் 30 அடி இடைவெளியில் நடக்கின்றனர், வலையை தண்ணீரில் மூழ்கடித்தபடி இழுக்கின்றனர். வலையில் சிக்கியுள்ளதை பார்க்காமல் எடையை வைத்து கணிக்கின்றனர்.
“இரவில் காலுக்கடியில் கிடப்பதை உங்களால் பார்க்க முடியாது. ஆம்சியா கபலலா பேட்டரி ஆஸதி. வக்த் லைட்சியா சிக்னல்வர் சல்தாத் [நெற்றியில் பேட்டரி விளக்கை அணிகிறோம். அந்த மின்னொளி மட்டுமே எங்களுக்கு உதவுகிறது]. பலத்த அலைகள் வரும்போது சிறு தவறு செய்துவிட்டாலும் உங்கள் சமநிலையை இழந்துவிடுவீர்கள். இங்கு பாதுகாப்பு என்பதே கிடையாது. சில சமயங்களில் கழுத்துவரை தண்ணீர் இருக்கும். ஆனாலும் நாங்கள் வேலை செய்கிறோம், மீன்களின்றி திரும்பினால், அன்றைய நாளுக்கு செலவுக்கு பணம் கிடையாது.” அமிதா நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீருக்குள் நிற்கிறார், கையில் பிடித்திருக்கும் வலையில் போதிய எடையை உணரும் வரை.
இவரைப் போன்றே படகுகள் இல்லாத பலரும் இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தஹானு தாலுக்கா வரோர் கிராமத்தில் உள்ள கழிமுகத்தில் கைகளால் வலை வீசி மீன் பிடிக்கின்றனர். இது அலை ஏற்ற இறக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும். கடலின் நீர்மட்டம் குறையும்போது இது வெளிப்படும். கடல் நீர் திரும்பும்போது நீரில் மூழ்கிவிடும். " கடலுக்குச் செல்லாமல், நாங்கள் எதை உண்பது?" என்று அமிதா கேட்கிறார்.




















