ஐம்பத்தைந்து ஆண்டுகளாக, சங்கத் ராமின் வாழ்வுக்கும் மரணத்துக்கு இடையிலான தூரம் மயிரிழையாக இருந்திருக்கிறது. கட்டைவிரல் நகத்தையும் ஆட்காட்டி விரல் நகத்தையும் காட்டி அந்த இடைவெளியை சுட்டும் அவர், “இந்தளவுக்கு நிலை தடுமாறினாலும் மூழ்கி விடுவோம்,” என்கிறார். சில்லிடும் நீரோடும் பீஸ் காட்டாறுக்குள் படகோட்டுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. நிச்சயமாக ஆறு கடக்க ஒரே வழியாக இருந்த காற்றடைக்கப்பட்ட மாட்டுத்தோல் படகுகளில் சாத்தியமல்ல.
89 வயது சங்கத் ராம், இமாச்சல பிரதேசத்தின் குல்லு பள்ளத்தாக்கில் கடைசியாக வாழும் தாருக்களில் (ஆற்றில் படகோட்டுபவர்கள்) ஒருவர். அவரது தொழில் நீண்ட காலத்துக்கு முன்பே மடிந்து விட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலங்களும் ட்ராலிகளும் வந்தபோதுதான் அந்த தொழில் நசிவடையத் தொடங்கியது. அதற்கு முன் உள்ளூர் தெய்வங்கள் தொடங்கி அரசர்கள் வரை பராத்கள் தொடங்கி பிணங்கள் வரை, விளைபொருட்கள் முதல் மரங்கள் வரை, வானுக்கு கீழ் இருக்கும் எல்லாரையும் எல்லாவற்றையும் அவர் தன் ‘திரியா’வில் வைத்து ஆற்றை கடந்திருக்கிறார்.
திரியா என்பது காற்றடைக்கப்பட்ட மாட்டுத்தோல். பீஸ் ஆற்றை கடக்க செய்யப்பட்டவை. திரியா பற்றிய கதைகள், இந்தியாவுக்குள் நுழைய அலெக்சாண்டரின் படையினர் எதிர்ப்பு தெரிவித்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை செல்பவை. அச்சமயத்திலிருந்து திரியாக்கள் ஓட்டப்படுவதாக வட்டாரக் கதைகள் சொல்கின்றன. இந்த காட்டாறை தாண்டவே முடியாது என கிரேக்கர்கள் கருதினர். அலெக்ஸாண்டர் எதிர்கொண்ட தடைகளிலேயே மிக மோசமான தடை பீஸ் ஆறுதான். இந்தியாவின் கிழக்கு பகுதியில் அலெக்ஸாண்டர் முன்னேற முடியாமல் நிறுத்தி வைத்தது இப்பகுதிதான் என உறுதியாக கூறுகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
பல நூற்றாண்டுகளாக, சங்கத் ராமின் முன்னோர் உள்ளிட்ட படகோட்டிகளால் செலுத்தப்பட்ட திரியாக்கள்தான், பீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளை இணைக்கும் பாலம் போல செயல்பட்டிருக்கிறது. உயர்மலை ஆறான பீஸ் குந்தில் தொடங்கும் இந்த ஆறு 470 கிலோமீட்டர் ஓடி, பஞ்சாபின் ஹரிகேவிலுள்ள சட்லெஜில் இணைகிறது.










